19.03.2013 அன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ஹேமா. பாண்டுரங்கம், பொறுப்புக்குழு உறுப்பினர் து.சடகோபன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் செய்தியாளார்கள் மத்தியில் வெளியிட்ட கூட்டறிக்கை:
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து சர்வதேச பொது விசாரணை, தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை இனப் படுகொலையை கண்டிக்கும் விதமாக பொறுப்புமிகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், மத்திய இணை அனமைச்சருமான திரு. நாராயணசாமி அவர்களின் அலுவலகத்தை அடையாளபூர்வமாக முற்றுகையிட சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டபடி கையில் தடி மற்றும் ஆயுதங்களுடன் குண்டர்களைப் போல் போராட வந்தவர்களைத் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் இதனைத் தடுத்து அமைதி ஏற்படுத்துவதற்கு பதிலாக தங்கள் பங்கிற்கு தடியடி நடத்தி தாக்கியுள்ளனர்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு நீதிக் கிடைக்க சர்வதேச பொது விசாரணை நடத்திட வேண்டுமென ஐ.நா. மனித உரிமைக் கவுன்சலில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும், கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதனைத் தடுப்பதற்கு மத்திய அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காங்கிரசாரின் இத்தகைய அனுகுமுறை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமீழீழ விடுதலைக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராக இருப்பதையே காட்டுகிறது.
ஈழத் தமிழர்களைக் காக்கவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவர்கள் மீது தன் கட்சிக்காரர்களை ஏவி தாக்குதல் நடத்துவது அநாகரீகமானது. இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீதி விசாரணைக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
Leave a Reply