மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.02.2013) விடுத்துள்ள அறிக்கை:
கோவாவில் நடந்த இரும்புச் சுரங்க ஊழலில் நீதிபதி ஷா கமிஷனால் குற்றம் சுமத்தப்பட்ட புதுச்சேரி அரசு நிதிச் செயலர் ராஜீவ் எதுவன்ஷியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
கோவா மாநிலத்தில் கடந்த 2000 முதல் 2012 வரை சட்ட விதிகளுக்கு மாறாக சுரங்கங்களில் இரும்பு வெட்டி எடுத்ததில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை செய்து சென்ற ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று அரசுக்கு 600 பக்க அறிக்கையை அளித்தது.
இந்த விசாரணை அறிக்கையில் 35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், அப்போதைய கோவா முதல்வர் திகம்பர் காமத், கனிம வளத்துறை செயலர் ராஜீவ் எதுவன்ஷி, இயக்குநர் அரவிந்த் லொலியன்கர் ஆகியோர் ஈடுப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும். ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கனிம வளத்துறை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறார். ஆனால், ராஜீவ் எதுவன்ஷி புதுச்சேரியின் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். ஊழல் அதிகாரிகளை புதுச்சேரியில் பணியாற்ற அனுப்புவது என்பது மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. இது சின்னச் சிறு பகுதியான புதுச்சேரியின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும்.
எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக ஊழல் அதிகாரி ராஜீவ் எதுவன்ஷியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு விரிவான மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.
Leave a Reply