மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.02.2013) விடுத்துள்ள அறிக்கை:
தமிழக அரசைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
காவிரி நதி நீர் சிக்கல் தொடர்பாக நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007ம் ஆண்டு வழங்கியது. தமிழக அரசின் தொடர் முயற்சியாலும், உச்சநீதிமன்ற தலையீட்டாலும் இந்தத் தீர்ப்பு சென்ற 20ந்தேதியன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவானது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்பதோடு, காவிரி நீர் பங்கீடு குறித்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.
கர்நாடகம் திறந்து விடும் நீரின் அளவைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு ஏற்படுத்தவும் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவற்றை ஏற்படுத்துவதன் மூலம் நடுவர் மன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வலியுறுத்தி உள்ளார்.
, முதல்வர் ரங்கசாமி அவர்களும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுத வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல, காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.
Leave a Reply