மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (19.02.2013) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள சந்தை புதுக்குப்பத்தில் நடந்த சாதி மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
சென்ற 14ந்தேதியன்று பேருந்தில் மாணவர்களிடையே நடந்த சாதி ரீதியிலான சண்டையில் சுத்துக்கேணி கிராமம் தாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் சந்தை புதுக்குப்பம் தலித் பகுதி தாக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து இரு தரப்பினர் மீதும் வழக்குப் போட்ட போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் போடாமல் விட்டுள்ளனர். பின்னர் அமைப்புகள் தலையிட்ட பின்னர் இச்சட்டப் பிரிவுகளைச் சேர்த்துள்ளனர். சுத்துக்கேணி சம்பவம் நடந்த உடனேயே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கலவரத்தைத் தடுத்திருக்கலாம்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஆனால், இதுவரையில் ஆட்சியர் நேரில் சென்று பாரக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் இழப்பீடு வழங்கவில்லை.
திருக்கனூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு சாதி மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இப்பகுதியை வன்கொடுமைப் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். இப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து சாதி மோதல் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
Leave a Reply