கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (15.2.2013) காலை 10.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், பொருளாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாலர் எம். நிஜாமுதீன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
வீரப்பன் வழக்கில் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தூக்கை எதிர்நோக்கி கர்நாடக சிறையிலுள்ள நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசும், கர்நாடக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
1993ம் ஆண்டு பாலாறு அருகே நடந்த குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் 12 பெண்கள் உட்பட124 தமிழர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி பல ஆண்டுகளாக மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 2000ம் ஆண்டு இவ்வழக்குகளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணப்பா தலைமையில் மைசூரில் தனி நீதிமன்றம் (Special Court) ஒன்றுஅமைக்கப்பட்டது. இந்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 2001ல் இவ்வழக்கிலிருந்து 109 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஞானப்பிரகாசம், மாதையன், பிலவேந்திரன், சைமன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இத்தண்டனையை எதிர்த்து நால்வரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2004ல் மேற்சொன்ன நால்வருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து நால்வரும் குடியரசுத் தலைவருக்குத் தனித்தனியே கருணை மனுக்கள் அளித்தனர். சென்ற 11.02.2013 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இத்தகவல் தற்போது கர்நாடகா மாநிலம் பெல்காம் சிறையில் உள்ள நால்வருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. நால்வரையும் இன்னும் 14 நாட்களுக்குள் தூக்கிலிடுவோம் என அறிவித்துள்ளார். தற்போது அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக சிறைத்துறையினர் செய்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி ‘பச்சன்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியதீர்ப்பில் கூறியபடி இவ்வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல’ எனக் கூறி மரண தண்டனை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், மேற்சொன்ன நால்வரும் 18 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளனர். தற்போது அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது என்பது இரட்டிப்பு தண்டனை வழங்குவதாகும். மரண தண்டனை நிறைவேற்றாமல் பல ஆண்டுகள் சிறையில் இருந்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் எனப் பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் உள்ளிட்ட 95 பேர் தமிழக சிறைகளில்தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். தற்போது கர்நாடகா பெல்காம் சிறையில் 2 பெண்கள் உட்பட 60 பேர் மரண தண்டனைக்கைதிகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1455 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவேடு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு ஆகியோர் ரகசியமாக தூக்கிலிடப்பட்டது நாடெங்கும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. கடந்த 7 மாதங்களில் 7 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இந்நிலையில், நான்கு தமிழர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும், அவர்களைத் தூக்கிலிட நடவடிக்கைகள் துவங்கியுள்ளதும் மனித நேயமுள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். குற்றம் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், காட்டுமிராண்டிக் காலத்து ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற மரண தண்டனைக் கூடாது என்கிறோம். மரண தண்டனை வழங்குவதால் குற்றங்கள் குறைகின்றன என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. மகாத்மா காந்தி, அன்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் மரண தண்டனைக் கூடாது எனக் கூறியுள்ளனர்.
‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்பின் கணக்குப்படி உலக அளவில் இதுவரையில் 140 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் கைவிட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மரண தண்டனையை நீக்க வேண்டுமென குரல் எழுந்து வரும் இவ்வேளையில், இந்தியா தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுவது ஏற்புடையது அல்ல.
எனவே, கர்நாடக அரசும், மத்திய அரசும் தூக்கை எதிர்நோக்கியுள்ள ஞானப்பிரகாசம், மாதையன், பிலவேந்திரன், சைமன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
செய்தியாளர்கள்: உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: நால்வரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை பெற வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் 17ம் தேதியன்று ஈரோட்டில் தமிழக, கர்நாடக அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்துகிறார்கள். அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுத்து அறிவிப்பார்கள். 2004ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதே, கர்நாடக எல்லைக் கிராமமான மார்டள்ளியில் ஒரு மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் தமிழக, கர்நாடக மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். நாங்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றினோம்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா.பாபு உடனிருந்தார்.
Leave a Reply