மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2013) விடுத்துள்ள அறிக்கை:
வினோதினி மீது ஆசிட் வீசிக் கொன்ற சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
ஒருதலைக் காதலால் சென்ற நவம்பர் 14 அன்று காரைக்காலை சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயமடைந்த வினோதினி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது இரண்டு கண்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் பார்வை பறிபோனது. இந்நிலையில், நேற்றைய தினம் சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்தார். வினோதினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காரைக்கால் போலீசார் இச்சம்பவத்தோடு தொடர்புடைய குறிப்பாக ஆசிட் கொடுத்தவர் உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க அரசு அனைத்து வகையிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து பெண்களிடம் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.
Leave a Reply