மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (6.2.2013) வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது எனவும் பேசியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது என மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். சர்வதேச சமூகம் வகுத்துள்ள போர் நெறிமுறைகள் அனைத்தும் மிக வெளிப்படையாக மீறப்பட்டன. தற்போது ராஜபக்சே உள்ளிட்டவர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை ஐ.நா. சபை மேற்கொண்டு வருகிறது.
மேலும், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் ஒன்றை சென்ற ஆண்டு கொண்டு வந்தது. பல்வேறு அழுத்தத்தின் காரணமாக இந்தியா அத்தீர்மானத்தை நீர்த்துப் போக செய்து, பின்னர் ஆதரித்தது. தற்போது அத்தீர்மானத்தின் செயல்பாட்டுக் காலம் முடிவடைவதால் மீண்டும் அமெரிக்க இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டு வருகிறது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுவதும் குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில், திரிகோணமலையில் நடந்த இலங்கையின் 65வது சுதந்திர தின விழாவில் பேசிய ராஜபக்சே ‘இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது’ எனக் கூறியுள்ளார். இப்பேச்சு இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களை முற்றிலும் அதிகாரமற்றவர்களாக ஆக்கும் செயலாகும். ராஜபக்சேவின் இந்த ஆணவப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில் ராஜபக்சே இந்தியா வருவதும், அதுவும் தமிழகத்தின் வழியாக திருப்பதி செல்வதும் இலங்கை அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாக ஆதரவளிப்பதாகும்.
எனவே, இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்துகிறோம்.
Leave a Reply