மக்கள் உரிமைக் கூட்டமிப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து வலுப்பெற்று வரும் வேளையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை ரகசியமாக எரவாடா சிறையில் தூக்கிலிட்டது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரான மரண தண்டனை கூடாது என்பதுதான் மனித ஆர்வலர்களின் கருத்தாகும்.
இந்தியாவில் இதுவரையில் 309 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்திற்குப் பின்னர் கசாப் உள்ளிட்ட 52 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கி 309 பேர் இருக்கும் போது கசாப்பை மட்டும் அவசரம் அவசரமாக தூக்குப் போட்டது ஏன்?
ஐ.நா. பொதுசபையில் மரண தண்டனைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உலகம் முழுவதுமுள்ள 110 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் மரண தண்டனையை ஆதரித்து வாக்களித்துள்ளன. பெரும் ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியா மரண தண்டனைக்கு ஆதரவாக இருப்பது கண்டனத்திற்குரியது.
மரண தண்டனை குற்றம் செய்பவர்களை அச்சமடைய செய்யும், அதனால் குற்றங்கள் குறையும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரில் கசாப் தவிர 10 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிர் போகும் என்று தெரிந்தே குற்றத்தில் ஈடுபடுவோரிடையே மரண தண்டனை எப்படி அச்சுறுத்தலாக அமையும்.
பாராளுமன்றத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்த வாக்கெடுப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்க் கொண்டுள்ள மத்திய அரசு இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றம் மூலம் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் மரண தண்டனைக் கூடாது என வலியுறுத்தி உள்ளனர். இவர்களைப் பின்பற்றி இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
Leave a Reply