மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த காலக்கெடு விதித்தும், அரசு வரையறுத்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதும், அவ்வாறு மீட்டர் இருந்தால் அதன்படி கட்டணம் வசூலிக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் சமூக அமைப்புகள் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் விளைவாக அரசு இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், புதுச்சேரியில் ஒடும் ஆட்டோக்களில் வரும் நவம்பர் 30ந் தேதிக்குள் மீட்டர் பொருத்த வேண்டும், அரசு வரையறுத்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் கூறியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைவிட புதுச்சேரியில் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு. இதனால் ஆட்டோவை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மத்தியில் புதுச்சேரியின் பெயர் கெட்டுப் போகிறது.
இந்நிலையில், மேற்கூறியவாறு அரசு அறிவித்ததை எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கட்சி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றுதிரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply