மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் மீது தமிழக காவல்துறை கண்ணீர் புகை வீசி, தடியடி தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அணு உலையை மூட வலியுறுத்தியும் நாளை (11.09.2012) செவ்வாய், காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில் பல்வேறு கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் அமைதியான வழியில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அணு உலையில் எரிபொருள் நிரப்பப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கூடங்குளம் அணு உலையை நோக்கி கடற்கரை வழியாக சென்று ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று தமிழக காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்கள் மீது கண்ணீர் புகை வீசி, தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் காயமடைந்துள்ளனர். மேலும், போராட்டத்தை முன்னின்று நடத்தும் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
பல தலைமுறைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலையை மூட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் நாளை நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டு ஆதரவுத் தர வேண்டுகிறோம்.
Leave a Reply