மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் பணியாற்றும் தொழிலாளிகள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற வெண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கடைபிடிப்பதைக் கண்காணிக்கவும் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
நேற்றைய தினம் லாஸ்பேட்டையில் தன்ணீர் தொட்டி சாரம் சரிந்து விழுந்து 4 தொழிலாளிகள் மரணமடைந்துள்ளனர். 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் பணி செய்யும் தொழிலாளிகள் எந்தவித பாதுகாப்பு கவசங்களையும் அணிவதில்லை. இதனால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தொழிலாளர் துறையிடம் உள்ளது.
மேலும், இதுபோன்ற பணிகளை ஒப்பந்ததாரரிடம் அளிக்கும் போது அரசு அவர்களிடம் தொழிலாளிகளைப் பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உறுதிமொழியை எழுத்து மூலம் பெற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு இறந்துப் போன தொழிலாளிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடும் காலதாமதமில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அவர்கள் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்க வேண்டும்.
Leave a Reply