சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கென மொத்தம் 112 அகதி முகாம்கள் உள்ளன. இது தவிர வெளிநாட்டு சட்டம் 1946, பிரிவு 3 (2) (இ)-ன்படி ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த வெளிநாட்டினரை அடைத்து வைக்க செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பு முகாம்கள் உள்ளன. தற்போது இலங்கைத் தமிழ் அகதிகள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 32 பேரும், பூந்தமல்லி முகாமில் 8 பேரும் உள்ளனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகளை திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வலியுறுத்தி பூந்தமல்லி முகாமிலுள்ள செந்தூரன் கடந்த 25 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் சிறப்பு முகாமில் உள்ள அனைவரையும் விடுவிக்க கோரி தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு செங்கல்பட்டு முகாமில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 7 பேரை விடுவித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்.

இதேபோல், தமிழக அரசு செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சிறையை போன்றுள்ள சிறப்பு முகாம்களை கலைத்திடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தனித்தனியே மனு ஒன்றையும் அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*