மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.08.2012 அன்று விடுத்த பத்திரிக்கை அறிக்கை:
புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு காவல்துறையினர் இடையே செயல்திறன் குறைந்து வருவதுதான் காரணம் என்பதால், இதுகுறித்து ஆராய ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சி.பி.ஐ. உயரதிகாரி தலைமையில் கூட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் போலீஸ் காவலில் கைதி ஜெகன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட சம்பவம், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கைதி ஜெகனை காப்பாற்றி இருக்கலாம்.
போலீஸ் உயரதிகாரி முதல் சாதாரண காவலர் வரையில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. காவல்துறையில் உள்ள நேர்மையானவர்கள் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவதில்லை. இதனால், போலீசாரும் ரவுடிகளும் கை கோர்க்கும் நிலை உருவாகிறது.
பணியில் தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை வரும் போது அரசியல் தலையீடு காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப்படுகிறது.இதனால், போலீசார் மத்தியில் பணியில் சட்டப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்ற அச்சம் நீங்கிவிடுகிறது. கடந்த காலங்களில் திருடர்களிடம் இருந்து போலீஸ் உயரதிகாரிகள் நகை அபகரித்தது, காவல்நிலையத்தில் சரணடைந்த கைதி உறுவையாறு சக்திவேலை சுட்டுப் பிடித்ததாக கதைவிட்ட சம்பவம் என சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது என பல உதாரணங்கள் உள்ளன.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் போலீசார் செயல்திறன் பெருமளவில் குறைந்துள்ளது. இதனுடைய உச்சக்கட்டம்தான் கைதி ஜெகன் கொல்லப்பட்ட சம்பவம். புதுச்சேரி அரசும், காவல்துறையும் இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுபற்றி போதிய கவனம் செலுத்த வேண்டும்.
சந்தன வீரப்பனை பிடிக்க சென்ற கர்நாடக – தமிழக கூட்டு அதிரடிப்படையின் அத்துமீறல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி சதாசிவா, சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய கூட்டு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்த முன்னுதாரணத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு புதுச்சேரி போலீசாரின் திறனை மேம்படுத்த, விரிவான அய்வு மேற்கொண்டு அரசுக்கு உரிய பரிந்துரை அளிக்க ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சி.பி.ஐ. உயரதிகாரி தலைமையில் கூட்டு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply