மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
ஜிப்மர் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலம்தொட்டே அங்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவுறுத்தலின்படி, ஜிப்மர் நிர்வாகம் மாத வருமானம் ரூ.2499க்கு மேல் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய உடனேயே புற்று நோய் மற்றும் அதன் தொடர்புடைய நோய்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது என்ற சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமாக மாற்ற முயற்சித்தபோது அதனை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது இலவச மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி, மத்திய அரசு நிலையிலேயே ஜிப்மர் ஊழியர்கள் நீடிப்பது, சி மற்றும் டி பிரிவு இடங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை ஆகிய முக்கிய கோரிக்கைகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தன்னாட்சி மசோதா இயற்றப்பட்டது. ஆனால், தற்போது இதனை மீறி சட்டத்திற்குப் புறம்பாக ஜிப்மர் நிர்வாகம் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது.
புதுச்சேரி மட்டுமல்லாமல், தென்மாநில மக்கள் அனைவருக்கும் பயன்பட்டு வரும் ஜிப்மரில் இலவச சிகிச்சை முறையை மாற்றி கட்டணம் வசூலிப்பது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும்.
இன்றைக்கு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்றவை தனியார்மயமாகி அப்பட்டமான வியாபாரமாகிவிட்டதால் பொதுமக்கள் அரசு கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் பெரிதும் நம்பியுள்ளனர், இந்திய அரசியல் சட்டம் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மக்களுக்கு உத்தரவாதம் செய்து வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை முறை தொடர ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply