மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.06.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் இருந்து தங்க நகைப் பறித்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சிதம்பரத்தை சேர்ந்த நகைத் திருடர்கள் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் பல வீடுகளில் புகுந்து ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர். இதில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 1000 பவுன் நகைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரியவர்களிடம் சேர்ப்பதற்குப் பதிலாக அவற்றை போலீசார் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 100 பவுன் நகைகளை மட்டுமே போலீசார் கணக்குக் காட்டிவிட்டு மீதியை அபகரித்துள்ளனர். அப்போது கைது செய்யப்பட்ட நகை திருடிய குற்றவாளிகள் நிதிமன்றத்தில் போலீசார் தங்க நகைகளைப் பறித்ததாக முழக்கம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் உயரதிகாரிகள் சிலரும், சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் இந்த நகை அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நகைப் பறிப்பில் இதற்கு முன்னர் பதவியில் இருந்த ஐ.ஜி. சார்மாவிற்கு உரிய பங்கு சென்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது புதியதாக பொறுபேற்று இருக்கும் ஐ.ஜி. ரன்வீர் சிங் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. திருடர்களிடம் இருந்து தங்க நகைகளைப் போலீசார் பறித்தது என்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள போலீஸ் உயரதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் உடனடியாக திருட்டு வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
மேலும், போலீசார் மீதான குற்றச்சாட்டு என்பதால், இதனை புதுச்சேரி போலீசார் விசாரிப்பது சரியானதாக இருக்காது. எந்த நேரத்திலும் உண்மைகள் மூடி மறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply