நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்

 – அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக அக்கறை உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட விஷயம் மட்டுமன்று. அதே குடும்பங்களைச் சேர்ந்த ஆறு அப்பாவி ஆண்கள் மீதும், கடலூரில் வாழ்ந்து வரும் அவர்களின் மேலும் மூன்று உறவினர்கள் மீதும் பொய் வழக்குப் போட்டு இன்னும் அவர்கள் சிறையிலுள்ளதைப் பலரும் அறியமாட்டார்கள். சமவெளிகளில் வாழும் இப்பழங்குடிமக்கள் ஒரு காலத்தில் குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டு கொடுமைக்காளானவர்கள்.. இப்படிச் சொல்வது கூட ஒரு வகையில் தவறு. ஏனெனில் அவர்கள் கொடுமைக்காளானது ‘ஒரு காலத்தில்’ மட்டுமன்று. இன்றளவும் நம் காவல்துறையும், வருவாய்த்துறையும் அவர்களைக் குற்றப் பரம்பரையாகவே கருதி வருகின்றன எனச் சொல்வதே சரியாக இருக்கும்.

இன்றளவும் கண்டுபிடிக்க இயலாத திருட்டு வழக்குகளை ‘முடித்து’ கோப்புகளை ‘மூடுவதற்கு’ அப்பாவி இருளர் ஆண்களின் மீது பழியைப் போட்டு அவர்களைச் சிறையில் அடைப்பதைத் தமிழகக் காவல் துறை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. கைது செய்து வழக்குப் போடுவதோடு முடிந்து விடுவதில்லை. அவர்களை அடித்து, உதைத்து, மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்து அக் ‘குற்றங்களை’ ஒப்புக்கொள்ளச் செய்வார்கள். இவர்களைப் பிடிப்பதற்காக ‘ரெய்ட்’ வரும்போது கண்ணில் படும் இருளர் பெண்களைத் தம் காம வெறியைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்துவதும் சம அளவில் நிகழும். சில நேரங்களில் பெண்களைக் கொண்டு போவதற்காகவே ‘குற்றங்களைத்’ தேடிக் கண்டுபிடித்து வருவதுமுண்டு.

காலங்காலமாக நடந்து வந்த இக்கொடுமைகள் ஒரளவு சமூக மற்றும் ஊடகக் கவனம் பெற்றது அத்தியூர் விஜயா (1993) பிரச்சினையில்தான். விஜயாவுக்கு அண்ணன் முறையுள்ள வெள்ளையன் என்பவரைத் தேடி வந்ததாகச் சொன்ன புதுச்சேரி காவல்துறையினர் விஜயாவையும் அவரது பெற்றோரையும் சேர்த்து இழுத்துச் சென்றனர். விஜயாவை மட்டும் வாகனத்தை விட்டு இறக்கிச் சென்ற ஆறு போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணை மாறி மாறி வன்புணர்ச்சி செய்தனர். அந்தப் பெண் அடைந்த துன்பம் ஒருபுறமிருக்க என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் ஒன்றும் செய்ய இயலாமல் வாகனத்திற்குள் அடைபட்டுக்கிடந்த அந்தப் பெற்றோரின் மனம் அன்று என்ன பாடுபட்டிருக்கும்.

இந்த நிகழ்வு பேரா. பா. கல்யாணி (பிரபா. கல்விமணி), கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரத்தினம், ரவிகுமார் ஆகியோரின் கவனத்திற்கு வந்ததால் இருளர்கள் மீதான இந்த வன்கொடுமை வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதைப் பதிவு செய்ய வைத்துத் தொடர்ந்து மனித உரிமைக் களத்தில் நின்று அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து போராடியதன் விளைவாக இக்கொடுமை ஊடகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆறு போலீஸ்காரர்களுக்கும் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. விஜயாவிற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வழக்கினூடாக இருளர்களின் இயக்க வரலாற்றில் ஒரு பண்பு மாற்றம் நடை பெற்றது. முன்னதாக சுடரொளி சுந்தரம் முதலானோர் இருளர்களின் நலனுக்கான அமைப்புகளைச் செயல்படுத்தி வந்தனர். விஜயா வழக்கினூடாக இருளர்கள் மீதான இந்த வன்கொடுமைகள் காலங் காலமாகவும், ஏராளமாகவும் நடைபெற்று வருவதை அறிந்த பேராசிரியர் கல்யாணி “பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்” எனப் புதிய அமைப்பொன்றை உருவாக்கினார். சகோதரி லூசினா அவரது சபையின் அனுமதி பெற்று முழு நேர ஊழியராக வந்து பணியாற்றினார். பி.வி. ரமேஷ், கா தமிழ்வேங்கை, முருகப்பன், வழக்குரைஞர்கள் பவணந்தி, ராஜகணபதி, பூபால், தங்க. ரமேஷ் முதலான மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து கொண்டனர் சி.ஜெயபாலன், சு.ஆறுமுகம், மு.நாகராஜன், கோ.ஆதிமூலம், க.சிவகாமி, கி.சுகுணா முதலானோர் இருளர் சமூகத்திலிருந்தே உருவாகி இன்று அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

இயக்கமாக உருப்பெற்றுச் செயல்படத் தொடங்கிய பின்புதான் காவல்துறை வன்கொடுமைகளுக்கு அடுத்தபடியாக இருளர்கள் சந்திக்கும் இன்னொரு மிகப் பெரிய பிரச்சினை வருவாய்த்துறையிடமிருந்து உருவாவதை கல்யாணி முதலான முன்னோடிகள் உணர்ந்து கொண்டனர். பழங்குடியினருக்கான எந்த அரசுச் சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக உள்ள சாதிச் சான்றிதழ் இருளர்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளுடன். மிகக் கடுமையாகப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. திரு. ப.சிவகாமி அவர்கள் ஆதி திராவிடர் நலத் துறைச் செயலராக இருந்தபோது இச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒட்டு மொத்தமாகச் சில நூறு பேர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது ஒரு விதிவிலக்கு.

இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளைத் தொடங்கிய பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்திற்கு ஆங்காங்கு முறையான கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.. திண்டிவனத்தில் ஒரு அலுவலகமும் உண்டு. அவ்வப்போது மாநாடுகள் நடத்தப்பட்டுக் கோரிக்கைகள் முறைப்படுத்தப்படுகின்றன. கல்யாணி அவர்களின் வழிகாட்டலில் சங்கத்தின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு அவ்வப்போது சிறு வெளியீடுகளாகக் கொண்டுவரப் படுகின்றன.

இத்தனைக்கும் இடையில் காவல்துறை வன்முறைகளும், சாதிச் சான்றிதழ்கள் மறுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. 1993- 2009 காலகட்டத்தில் மட்டும் சங்கத்தின் மூலமாக அளிக்கப்பட்ட புகார்கள் 401. மோட்டார் மின்கம்பிகளைத் திருடியதாக 2007-2008 ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 5 இருளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்த ஆண்டில் (2011) மட்டும், இன்று நான்கு பெண்கள் வன்புணர்ச்சி செய்தது உட்பட இதுவரை நான்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

நவம்பர் 22, (2011), செவ்வாய்

திருக்கோவிலூரிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சங்கராபுரம் செல்லும் சாலையில் பெண்ணையாற்றைத் தாண்டியவுடன் அமைந்துள்ள கிராமம்தான் டி.கே மண்டபம். அவ்வூருக்குள் சுமார் ஒரு கி.மீ தொலைவில் ஆளரவமற்ற ஒரு காட்டுப்பகுதியில் மிக அழகான ஒரு இயற்கைச் சூழலில் பெண்ணையாற்றை ஒட்டி அமைந்துள்ளது ஒரு குன்று. குன்றின் கீழே உள்ள ஒரு கால்வாயில் வேகமாகப் பாய்கிற நீர் சற்றுத் தூரம் ஓடிப் பெண்ணையாற்றில் கலக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குன்றை உடைத்துப் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர். அப்போது வேலை செய்த தொழிலாளிகள் ஓய்வெடுப்பதற்கெனக் கல் மண்டபம் ஒன்று குன்றின்மேல் கட்டப்பட்டுள்ளது. இதனாலேயே ஊரின் பெயரும் மண்டபம் என்றாகியுள்ளது. கல் மண்டபத்திற்கும் பெண்ணையாற்றுக்கும் இடையில் ஒரு மதுரை வீரன் கோயில் உள்ளது. சென்ற டிசம்பர் 2ந் தேதியன்று இந்த நான்கு இருளர் பெண்கள் மீதான வன்முறை குறித்து அறிவதற்காக நாங்கள் நால்வரும் அங்கு சென்றபோது இந்தக் கொடுமை பற்றிய நினைவுச்சுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால் நிச்சயமாக அந்த அழகை ரொம்பவும் ரசித்திருப்போம். அந்த இடத்திலிருந்து எழுந்துவர மனமிருந்திருக்காது.

ஒரு மத்தியதர வர்க்கச் சுற்றுலா மனநிலையோடு இதை எழுதிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். சுற்றுலாவாக வந்து சில மணி நேரங்கள் இங்கே தங்கி, கொண்டு வந்த பொருட்களை உண்டு, பருகிச் செல்வதற்கு இது ஏற்ற இடந்தான். ஆனால் ஆள் அரவமோ, மின் வசதியோ இல்லாத இந்த வனச் சூழலில் நிரந்தரமாக வாழ்வது எத்தனை அச்சத்திற்குரிய ஒன்று. ஆனால் அந்த இரண்டு இருளர் குடும்பங்களும் மண்டபத்திற்கும் மதுரை வீரன் கோயிலுக்கும் இடையில் இரு சிறு ஓலைக் குடிசைகளை வனைந்துகொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து.கொண்டுள்ளன.

முதல் குடிசை முருகன் (55)- வள்ளி (50) தம்பதியருடையது. இவர்களுக்கு வெள்ளிக்கண்ணு (24), காசி (22), படையப்பா (12), மாணிக்கம் (10), ரங்கனாதன் (8) என்கிற மகன்களும், வைகேஸ்வரி (20), ராதிகா (17) என்கிற மகள்களும், ஆக ஏழு பிள்ளைகள். இவர்களோடு பெரியவர் முருகனின் தம்பி குமாரும் (45) திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். வெள்ளிக்கண்ணுக்கும் காசிக்கும் திருமணமாகிவிட்டது. இருவரும் இருளர்களின் தாய் வழிச் சமூக மரபுப்படி அவரவர் மனைவி வீட்டில் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கண்ணுவின் மனைவி கார்த்திகா (18) சென்னையிலுள்ள பனம்பாக்கத்தைச் செர்ந்தவர். அங்குள்ள செங்கற் சூளை ஒன்றில் வெள்ளிக்கண்ணு வேலை செய்கின்றார். காசியின் மனைவி லட்சுமி (20) உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர். காசி அங்குள்ள சூளை ஒன்றில் வேலை செய்கிறார். இருளர்கள் பெரும்பாலும் செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். பாரம்பரியத் தொழில்களான பாம்பு பிடித்தல், வேட்டை ஆடுதல் ஆகியவற்றைத் தொடர்பவர்களும் உண்டு. விதிவிலக்காக முருகன் வள்ளி தம்பதியினர் திருக்கோவிலூரில் ‘தட்டான் மண்’ சலிக்கின்றனர். அதாவது பொற்கொல்லர்கள் பணி செய்யும் பகுதிகளில் மணலைச் சலித்துத் தங்கத் துகள்களைப் பொறுக்கும் தொழில். தற்போது மழைக் காலமானதால் சூளை வேலை இல்லை. எனவே வெள்ளிக்கண்ணும் காசியும் தத்தம் மனைவிமாருடன் மண்டபத்திற்கு வந்துள்ளனர். இவர்களோடு சிறுவாலையைச் சேர்ந்த அவர்களின் உறவினர் ஏழுமலை (35) என்பவரும் விருந்தினராக வந்து தங்கியுள்ளார். ஆக அன்று அந்தக் குடிசையில் மட்டும் 11 பேர்கள். பக்கத்துக் குடிசையில் இன்னொரு குமார் (55), செல்வி (50) தம்பதியர் வசித்து வருகின்றனர்.

சம்பவ நாள் காலை அந்த இருளர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் விடிந்தது. பிள்ளைகள் மருமகள்கள் எல்லோரும் வந்துள்ள திருப்தியோடு முருகன் வள்ளி தம்பதியினர் மண் சலிக்கச் சென்றனர். வெள்ளிக்கண்ணுவும் ஏழுமலையும் மீன்பிடிக்கச் சென்றனர். இப்படி எல்லோரும் சென்றபின் வீட்டில் காசியும் பெண்களும் மட்டும் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூன்று போலீஸ்காரர்கள் ட்ரிபிள்ஸ் வந்துள்ளனர். முருகனின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த காசியைப் பிடித்து அடித்தனர். வீட்டில் இருந்த பெண்களை ஒரு நோட்டம் விட்டுவிட்டு முருகன் வந்தால் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிவிட்டுக் காசியை இழுத்துக் கொண்டு கிளம்பினர். காசியை பைக்கில் ஏற்றிவிட்டு ஒரு போலீஸ்காரர் நடந்து பின்னே சென்றார்.

தகவல் தெரிந்த முருகன், வள்ளி, குமார் ஏழுமலை, வெள்ளிக்கண்ணு ஆகிய ஐவரும் திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது காசி அங்கு இல்லை எனவும் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் பொய் சொல்லப்பட்டுள்ளது. திரும்பி அவர்கள் வீட்டிற்கு நடந்து வந்துள்ளனர். இதற்கிடையில் இரவு 8 மணி வாக்கில் ஒரு வாகனத்தில் 8 போலீஸ்காரர்கள் வந்துள்ளனர். கீழே வண்டியை நிறுத்திவிட்டு மெலே வந்தவர்கள் சட்டிபானைகளை உடைத்து, முருகன் வள்ளி தம்பதி தன் இரு மகள்களின் திருமணத்திற்கென ஆயுள் முழுவதும் உழைத்துச் சேமித்த 10 பவுன் நகைகளையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டனர். நான்கு செல் போன்கள், ஒரு சார்ஜர் ஆகியவற்றையும் கூட எடுத்துக் கொண்டனர். இருளர்களிடம் வேறு என்ன இருக்கிறதோ இல்லையோ செல்போன்கள் கட்டாயமாக இருக்கும் என்பார் கல்யாணி. குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வித வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் தொடர்பில் இருக்க செல்போன்கள் அவர்களுக்கு அத்தியாவசியமாகி விடுகின்றன.

லட்சுமி, கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு இளம் பெண்கள், படையப்பா, மாணிக்கம், ரங்கனாதன் ஆகிய மூன்று சிறுவர்கள், முருகனின் தம்பி குமார், பக்கத்துவீட்டுச் செல்வி ஆக 9 பேர்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். நான்கு போலீஸ்காரர்களும் ஏறிக்கொண்டனர். ஜீப் பெண்ணாற்றைக் கடந்து திருவண்ணாமலைச் சாலையில் விரைந்து திருக்கோவிலூருக்குச் சுமார் ஐந்து கி.மீ தொலைவில் சாலை ஓரமாக இருந்த ‘தைலா மரத் தோப்பின்’ பக்கம் திரும்பி நின்றது. தைலா மரத் தோப்பென்பது வேறொன்றுமில்லை. பெரிய காடு என்று நினைத்துக் கொண்டுதான் நாங்களும் அங்கே போனோம். போக்குவரத்து மிகுந்த அந்தச் சாலையில் சுமார் 100 மீ தொலைவிலிருந்த ஒரு சிறிய யூகலிப்டஸ் தோட்டம்தான் அது.

மண்டபத்தில் குடிசை அருகிலேயே நான்கு போலீஸ்காரர்களும் காத்திருந்தனர். முருகன், வெள்ளிக்கண்ணு, பக்கத்து வீட்டுக் குமார், விருந்தினர் ஏழுமலை, வள்ளி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரும்பியவுடன் ஆண்கள் நால்வரையும் போலீஸ்காரர்கள் லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். பின் ஐவரையும் ஒரு வேனில் ஏற்றி திருக்கோவிலூர் காவல் நிலயத்திற்குக் கொண்டு சென்றனர். நான்கு ஆண்களையும் லாக் அப் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு வள்ளியை மட்டும் புடவையை எல்லாம் அவிழ்த்துச் சோதனை இட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். ஒரு வெள்ளைத் தாளில் அவர் கைநாட்டும் பதிவு செய்யப்பட்டது. வெள்ளைத் தாளில் கைநாட்டு பெறுவதை மறுக்கிற தேர்வுச் சுதந்திரமோ இல்லை, என் பிள்ளைகளையும் மருமகள்களையும் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் உரிமையோ கேவலம் ஒரு இருளர் கிழவிக்கு உண்டா என்ன? “இந்த நாட்டிலேயே மிகப் பெரிய organised criminal gang எதுவென்றால் அது போலீஸ்காரர்கள்தான் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முல்லா அவர்கள் ஒரு தீர்ப்பில் பதிவு செய்துள்ளதுதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

பின்னர் மூன்று போலிசார் வள்ளியை மட்டும் வேனில் ஏற்றி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைக்குக் கொண்டு வந்தனர். தைலா மரத் தோப்பில் இருந்தவர்களும் போலீஸ் வாகனத்தில் அங்கு கொண்டு வரப்பட்டனர். இந்த வாகனத்தில் இருந்தவர்களில் குமாரைத் தவிர நான்கு இளம் பெண்களையும் சிறுவர்களையும் இறக்கி வேனில் ஏற்றினர். ஒரு போலீசும் இறங்கி வேனில் ஏறிக் கொண்டார். குமார் இருந்த வாகனம் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தது. பெண்களும் சிறுவர்களும் இருந்த வேன் ஏற்கனவே லொகேஷன் பார்த்து வைத்திருந்த தைலா மரத் தோப்பை நோக்கி நகர்ந்தது.

கவனியுங்கள். பொய் வழக்குப் பதிவு செய்து கணக்கு முடிப்பதற்குத் தகுதியான வயதுகளிலுள்ள ஆறு இருளர் இன ஆண்கள் (மாலையில் பிடித்துச் செல்லப்பட்ட காசி+ இரவில் வீட்டிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டு லாக் அப்பில் அடைக்கப்பட்ட நால்வர்+ இப்போது ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட குமார்= 6) போலீஸ் ஸ்டேஷனில்; காவல் துறையின் காம வெறிக்குத் தீனியாகக் கூடிய தகுதியுள்ள நான்கு இளம் பெண்களும் மற்றவர்களும் தைலா மரக் காட்டில்.

பயனற்ற சரக்குகளான மூன்று சிறுவர்கள் மற்றும் இரு முதிர்ந்த பெண்கள் இந்த ஐவரை மட்டும் வேனிலேயே இருக்க வைத்துவிட்டுஅதில் வந்த நான்கு போலீஸ்காரர்களும் இளம் பெண்களை மட்டும் வேனில் இருந்தவர்களின் கண் முன்னே கீழே இறக்கினர் . என்ன நடக்கப் போகிறது என ஒரு வேளை அந்தச் சிறுவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்களுக்கு என்ன நேரப் போகிறது போகிறது என வேனில் இருந்த முதிர்ந்த பெண்கள் இருவருக்கும் நிச்சயமாகத் தெரியும். நான்கு பெண்களில் இருவர் வள்ளியின் மகள்கள். மற்ற இருவர் அவரின் மருமக்கள். ஆனாலும் வள்ளியோ செல்வியோ அந்தக் கணத்தில் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வகையில் காம வெறிக்குப் பலியானவர்களின் துன்பத்தைக் காட்டிலும் இந்தத் துன்பம் கொடிது. இனி அந்தப் பெண்களில் ஒருவரான லட்சுமியின் சொற்களில்:

“ இரவு 12 மணி அளவில் என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா எங்க நாலு பேரையும் கீழே இறக்கி, வண்டியில் வந்த நாலு போலீசும் ஆளுக்கு ஒருத்தரா எங்களை தனித்தனி மறைவிடங்களுக்குத் தள்ளிப் போனாங்க. என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே தள்ளி என் சேலையை உருவி மார்பகங்களைக் கசக்கினார். ‘நான் மூணு மாசம் முழுகாமல் இருக்கேன்….என்ன உட்டுடுங்க அய்யா’ன்னு கெஞ்சியும் அவர் விடல. நான் கத்த முயன்றபோது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழிச்சார். இதேபோல கார்த்திகாவைத் தள்ளிச் சென்ற போலீசிடம் அவள், ‘என்னக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி நினைச்சு உட்டுடுங்க’ண்ணு சொல்லிக் காலில் விழுந்து கெஞ்சினாள். அவளையும் கீழ தள்ளிப் படுக்கவச்சு அவ தாலிக் கயிற்றை அறுத்து எறிஞ்சிட்டு அந்தப் போலீஸ் கற்பழிச்சார் (ஆகா, என்ன சென்டிமென்ட் பாருங்கள். தாலிக்குத்தான் நமது காவல் துறையினர் எத்தனை மதிப்பளிக்கிறார்கள் !). வைகேஸ்வரியை தள்ளிச் சென்ற போலீஸ் அவளை முழு நிர்வாணமாக்கி, மார்புல எட்டி உதச்சுக் கீழே தள்ளிக் கற்பழிச்சார். ராதிகாவை மட்டும் இந்த நாலு போலீசில் மூணு பேர் மாறி மாறிக் கற்பழிச்சாங்க. நாங்க சத்தம் போடாம இருக்குறதுக்காக எங்க வாயைப் பொத்தி அமுக்குனாங்க.”

நவம்பர் 23, புதன்

வேலை முடிந்த பின் நான்கு பெண்களும் இழுத்து வரப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார்கள். மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி லட்சுமியும் கார்த்திகாவும் அழுதுள்ளனர். இன்னொரு பக்கம் வைகேஸ்வரியும் ராதிகாவும் தேம்பி அழுதுள்ளனர். வள்ளி என்ன செய்வார் பாவம். மகள்களைச் சமாதானம் செய்வாரா இல்லை மருமகள்களுக்கு ஆறுதல் சொல்வாரா?

காலை சுமார் ஐந்து மணி அளவில் எல்லோரையும் மண்டபத்தருகே இறக்கி விட்டுவிட்டு போலீஸ் வேன் நழுவியது.

மற்றவர்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு முதிய பெண்கள் இருவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண்களின் நிலையை அறிய திருக்கோவிலூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். அங்கே அந்த ஆண்கள் அறுவரையும் ஒரு போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். விசாரித்தபோது விழுப்புரம் கொண்டு செல்வதாய்ச் சொன்னார்கள். பின்னர் வள்ளியும் செல்வியும் தங்களுக்குத் தெரிந்த பா.ம.க வழக்குரைஞர் வீர. செல்வராஜிடம் சென்று முறையிட்டுள்ளனர். அவர், “மேலிடத்தில் புகார் செய்யுங்கள்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் மதியத்தில் ஒரு போலீஸ் வாகனம் மண்டபத்தை நோக்கி வந்துள்ளது. பயந்துபோன பெண்களும் சிறுவர்களும் ஓடி அருகில் உள்ள புதர்க் காடுகளில் ஒளிந்துள்ளனர். குன்றின் மீது ஏறி வந்த போலீசார் குடிசைகளுக்குள் நுழைந்து அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை எல்லாம் மீண்டும் கலைத்துப் போட்டு நிர்தூளி செய்துவிட்டுப் போனார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதும் புகார்கள் செய்து விடக்கூடாது என்பதற்கான ஒரு மிரட்டல் நடவடிக்கையாக இது நடந்துள்ளது.

மாலையில் வீடு திரும்பிய வள்ளியும் செல்வியும் இதைக் கேள்விப்பட்டவுடன் இனி இங்கிருந்தால் பாதுகாப்பு கிடையாது எனச் சொல்லி எல்லோரையும் அழைத்துக்கொண்டு பகலில் சந்தித்த வழக்குரைஞர் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர் சாப்பிட 50 ரூபாய் பணம் கொடுத்து அன்றிரவு தங்கவும் அனுமதித்துள்ளார்.

நவம்பர் 24, வியாழன்

காலையில் வழக்குரைஞர் வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த ஒன்பது பேரும் (முதிய பெண்கள் இருவர்+ வன்புணர்ச்சிக்கு ஆளான நால்வர்+ சிறுவர் மூவர்) சந்தைப்பேட்டை கிளைச் சிறையில் தமது கணவன்மார்களும் உறவினர்களும் உள்ளனரா என்று பார்த்து, இல்லை எனத் தெரிந்தவுடன் புறப்பட்டு உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள லட்சுமியின் பெற்றோர்களிடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். லட்சுமியின் தந்தை கொளஞ்சி பழங்குடி இருளர் சங்கத்தின் உறுப்பினர். நடந்ததை அறிந்த அவர் கா.பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்க உறுப்பினர் திருமதி பூபதியிடம் அழைத்துச் சென்றார்.

நவம்பர் 25, வெள்ளி

இன்று மாலை பூபதி எல்லோரையும் இருளர் சங்கத்தின் விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷிடம் அழைத்துச் சென்றார். தகவலறிந்து பேராசிரியர் கல்யாணியும் சங்கப் பொருளாளர் நாகராஜனும் அங்கு வந்து சேர்ந்தனர். முதலில் புகார் எழுதுவதா இல்லை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதா என்கிற கேள்வி எழுந்த போது, முதலில் புகாரைப் பதிவு செய்வதுதான் முக்கியம் எனச் சொன்ன கல்யாணி, இரவு முழுவதும் அந்தப் பெண்களைத் துருவித் துருவி விசாரித்து, இடை இடையே அவர்களுக்குத் தைரியமும் ஊட்டி நடந்தது என்ன என்பதை முழுமையாகத் தொகுத்துள்ளார். இதுபோன்ற புகார்களை எழுதும்போது அது தேவையான எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாகவும், அதே நேரத்தில் சுருக்கமாகவும், முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருப்பார் கல்யாணி. எக்காரணம் கொண்டும் உண்மைகளை மிகைப்படுத்துவதோ பொய்களைச் சேர்ப்பதோ கூடாது, அப்படிச் செய்தால் அது புகாரைப் பலவீனப் படுத்திவிடும் என்று சொல்வார்.

நவம்பர் 26, சனி

காலையில் புகார் எழுதி முடிக்கப்பட்டது. தட்டச்சு செய்யத் தாமதமாகுமென்பதால் கையாலேயே எழுதி காலை 11 மணி அளவில் விழுப்புரம் காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குப் பாதிக்கப்பட்ட பெண்களுடன் எல்லோரும் சென்றனர். முன்னதாக டி.ஜி.பி திரு.ராமானுஜம் அவர்களுக்கு இந்தக் கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுருக்கமாகக் குறுஞ் செய்தி ஒன்றை கல்யாணி அனுப்பி வைத்திருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அலுவலகம் வந்த காவல் கண்காணிப்பாளர் நீ. பாஸ்கரன் ஐ.பி.எஸ் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதாகவும் வாக்களித்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களைத் தவிர மற்றவர்களைப் போகுமாறு கூறியுள்ளார். நல்ல வேளையாக நான்கு பெண்களும் இதுவரை குளிக்கவோ உடை மாற்றவோ இல்லை. அப்படிச் செய்திருந்தால் மருத்துவப் பரிசோதனை பயனில்லாமல் போயிருக்கும்.

நான்கு பேரும் தனி அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு மூடிய கதவிற்குள் மாலை மூன்று மணியிலிருந்து மறு நாள் காலை 8 மணி வரை ‘விசாரிக்கப்பட்டனர்’. வள்ளி, பூபதி, ரமேஷ், நாகராஜன் ஆகியோர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர். ஆய்வாளர் ரேவதி மற்றும் மல்லிகா, வசந்தா ஆகிய பெண் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் பெண்களை அச்சுறுத்தி மிரட்டியுள்ளனர். பொறுப்பு டி.ஐ.ஜி சக்திவேலின் கண்காணிப்பில் இது நடந்துள்ளது. மருத்துவப் பரிசோதனை என்றால் கால்களை அகல விரித்துப் பிடித்துக் கொண்டு பெண் உறுப்பில் டாக்டர்கள் கையை விட்டுத் துழாவுவார்கள் என்றெல்லாம் அவர்களிடம் சொல்லப்பட்டது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் கருத்தரிக்க்காமல் இருந்து, இன்று மூன்று மாதக் கருவைச் சுமந்துள்ள லட்சுமிக்கு அது கலைந்துவிடும் என்கிற அச்சம் ஊட்டப்பட்டது. “வன்புணர்ச்சிக் குற்றம் சாட்டப்பட்டால் அந்த நான்கு போலீசாரின் குடும்பங்களும் அழிந்து போய்விடும், அதனால் உங்களுக்கு என்ன பயன்? கற்பழிப்பதாகச் சொன்னது பொய் என நீங்கள் வாக்குமூலம் அளித்தால் கைது செய்துள்ள ஆறு பேர்களையும் விட்டுவிடுவோம். உங்களுக்கெல்லாம் தையல் மெஷின் வாங்கித் தருவோம்” என்றெல்லாம் கூறியுள்ளனர். விடியற்காலை 3 மணி அளவில் வள்ளி மட்டும் விசாரணை அறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 27, ஞாயிறு

காலை 6 மணி அளவில் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறைக்கு ரமேஷ் அழைக்கப்பட்டுள்ளார். உள்ளே பாஸ்கரனும் வேலூர் சரக டி.ஐ.ஜி சக்திவேலும் இருந்துள்ளனர். “ கைது செய்யப்பட்ட ஆறு பேர்களையும் விட்டுவிட வேண்டும் என்பதற்காக, தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகப் பொய் சொன்னோம் என்று எங்களிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த விஷயத்தை ‘டிராப்’ செய்துவிடுங்கள்” என்று சக்திவேல் கூறியுள்ளார். தொடர்ந்து “எஸ்.பி உங்களுக்கு வேண்டியதைச் செய்வார்” என்று கூறி முடித்துக் கொண்டார். .

பின்னர் பெண்கள் இருந்த அறைக்குள் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றிலும் பெண் போலீஸார் நின்றிருந்தனர். அந்தப் பெண்கள், “எங்களைக் கற்பழிக்கல. எங்கள் ஆட்களை விடணும்கிறதுக்காக நாங்கள்தான் பொய் சொன்னோம்” எனப் பயம் தொனிக்கச் சொல்லி, “சரிதானா?’ என்பதைப்போல பெண் போலீஸ்களைப் பார்த்துள்ளனர். அங்கு நின்றிருந்த வள்ளி அவர்களைப் பார்த்து, “போலீஸ்காரங்க உங்களை மிரட்டியதை ஐயா கிட்ட சொல்லுங்க” எனச் சொல்லியுள்ளார். பெண்கள் நால்வரும் மிரண்டு போய் மௌனமாக நின்றுள்ளனர். இது போன்ற ஒரு வாக்குமூலத்தை அந்தப் பெண்களிடம் பெற்று அதைப் பதிவு செய்துள்ளதும் அறிய வந்தது. இது குறித்துக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும் காலைப் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.

பின்னர் வள்ளியையும் நான்கு பெண்களையும் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து சிறிது நேரம் வைத்திருந்தபின் மதிய நேர வாக்கில் மண்டபத்திலுள்ள அவர்களது குடிசையருகில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த நிமிடம் வரை இருளர் சங்கப் பொறுப்பாளர்களிடம் வாக்களித்தது போல அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையில் உண்மைகளை மூடி மறைக்கக் காவல் துறை செய்கிற முயற்சிகள் குறித்து டி.ஜி.பிக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைத்தார் கல்யாணி.

கல்யாணியும் மற்றவர்களும் முதல் நாள் சென்று அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் பதிவு செய்த காவல் துறையினர், 26ந்தேதியிட்ட அந்த அறிக்கையுடன், ‘விசாரித்தபோது இது பொய் எனத் தெரிய வந்ததால் (mistake of fact) விசாரணை கைவிடப்படுவதாகக் (refer)’ குறிப்பிட்டு திருக்கோவிலூர் நீதித் துறை நடுவரிடம் இன்று தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் அதை உரிய நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

இது போன்ற பிரச்சினைகளில் நிர்வாக நடுவரின் (executive magistrate) விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவது வழக்கம். இத்தகைய விசாரணையை நீதிமன்ற நடுவர் ஒருவரே செய்ய வேண்டுமென தற்போது குற்ற நடவடிக்கைச் சட்டம் (176-1) திருத்தப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையைப் படித்த திருக்கோவிலூர் நீதித் துறை நடுவர் திரு. முரளீதர கண்ணன் அவர்கள் காவல் துறையின் இந்தத் தகிடுதத்தத்தை நம்பவில்லை. காவல் துறை விரும்பியதைப் போல இந்த வழக்கை ஊத்தி மூடிவிட அவர் தயாராக இல்லை. “ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை டி.எஸ்.பிதான் விசாரிக்க வேண்டும். அதெப்படி ஆய்வாளர் ஒருவர் இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளார்?” எனக் கேட்ட அவர், “நானே அவர்களிடம் நேரடியாக விசாரித்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி மாலை 6 மணி அளவில் மண்டபத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையைத் தொடங்கினார். இரவு 11 மணி வரை விசாரணை நடந்தது. மானுட மேன்மையின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழக் கூடிய இப்படியான அதிகாரிகளும் நீதியரசர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதித் துறை நடுவர் மட்டுமல்ல, ஊடகங்களும் கூட காவல் துறையின் இந்தப் பொய்களை நம்பத் தயாராக இல்லை. நடுவர் வருவதற்கு முன்னதாக அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பழங்குடி அமைப்பின் தலைவருமான திரு. நஞ்சப்பன் முதலானோரும் வந்து பாதிக்கப் பட்ட பெண்களைப் பார்த்து விசாரித்ததோடு ஆறுதலும் கூறினர். முந்திய நாள் இரவு நடந்த காவல் துறை மிரட்டல்களால் நிலை குலைந்திருந்த இப்பெண்கள் இந்த நிகழ்வுகளினூடாகத் தங்களைத் தேற்றிக் கொண்டனர். அஞ்சாமல் மீண்டும் உண்மைகளைச் சொல்லத் தொடங்கினர்.

ஒரு விறுவிறுப்பான திரைப்படம்போல வேகமாகக் காட்சிகள் மாறிக் கொண்டிருந்த இந் நிகழ்ச்சிப் போக்கில் இந்தக் கணத்தில் ஒரு புதிய நபர் தோன்றுகிறார். அவர் பெயர் தங்கமணி. ‘பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சி’ என்றொரு அமைப்பை நடத்திக் கொண்டிருப்பவர். சி.பி.எம் கட்சியுடன் நெருக்கமாக உள்ள இந்நபர் நீதித் துறை நடுவர் விசாரணையை முடித்துச் சென்ற கையோடு வள்ளியையும் நான்கு பெண்களையும் விழுப்புரம் அழைத்துச் சென்று, அவர்களைச் சி.பி.எம் அலுவலகத்தில் தங்க வைத்தார்.

வள்ளியின் குழந்தைகளும் பிறரும் அதே விழுப்புரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்தது நினைவிற்குரியது.

நவம்பர் 28, திங்கள்

காலை இதழ்கள் இது தொடர்பான இரு முக்கிய செய்திகளைக் கொண்டிருந்தன. டி.ஐ.ஜி சக்திவேல் தலைமையில் காவல் துறையினர் நான்கு பெண்களையும் மிரட்டிப் பொய் கூற வைத்தனர் எனப் பழங்குடி இருளர் பதுகாப்புச் சங்கம் வைத்த குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இன்னொருபக்கம் காசி, முருகன், குமார், வெள்ளிக்கண்ணு, ஏழுமலை, பக்கத்துக் குடிசை குமார் ஆகிய அறுவரும் விழுப்புரம் மேற்குக் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு நடந்த ஐந்து திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை கசியவிட்ட செய்தியும் வெளிவந்திருந்தது. “கடலூர் மத்திய சிறையில் நேற்று முன் தினம் (அதாவது 26ந் தேதி) அவசர அவசரமாக அடைக்கப்பட்டுள்ளனர்” என்பதாக தினகரன் நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 25ம் தேதி இரவு 11 மணி அளவில் இவர்கள் அறுவரும் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறித் தப்பிச் செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் தமிழ்மாறன் தலைமையிலான போலீஸார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அதில் கண்டிருந்தது.

“திருக்கோவிலூர் உட்கோட்டப் போலீஸார் விடுவித்த பிறகு காசி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக நடைமுறைக் கணக்குப்படி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” எனவும் தினகரன் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆறு பேரையும் மண்டபத்திலுள்ள இவர்களின் குடிசையில் வைத்து 22ந் தேதி கைது செய்து கொண்டு போனதை நாம் அறிவோம். 26ந் தேதிவரை இவர்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தலையிட்டு பிரச்சினை பெரிதான பின்பு இனியும் சட்ட விரோதக் காவலில் வைத்திருப்பது சிக்கலாகி விடும் என்கிற நிலை வந்த பின்னர் ‘அவசர அவசரமாக’ நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ரிமான்ட் செய்துள்ளனர். விழுப்புரம் சீனுவாசன் வீட்டில் 28.5 பவுன் நகை திருடப்பட்டது, ரவிக்கண்ணன் வீட்டில் ஒன்றே முக்கால் பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடியது, திருவாமூர் கோயில் உண்டியல் உடைப்பு, திருச்சி நெடுஞ்சாலையில் ஷோ ரூம் ஒன்றை உடைத்து செல்போன், காமெரா முதலான பொருட்களைத் திருடியது, நன்னாடு பெட்ரோல் பங்க்குக்கு முன் உள்ள வீடொன்றில் 13 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி திருடியது முதலான, போலீசால் இதுவரை கண்டு பிடிக்க முடியாத வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது போடப்பட்டுள்ளதும் அறிய வந்தது..

இன்று மீண்டும் விசாரணையை நீதிமன்றத்தில் வைத்துத் தொடர வேண்டும் என நீதியரசர் முரளீதரகண்ணன் அவர்கள் கூறியிருந்ததால் காலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சி.பி.எம் அலுவலகம் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களை அழைத்துச் சென்று திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அன்று விசாரணை முடிந்தவுடன் அப் பெண்கள் ரமேஷ் வீட்டிற்கு வந்து அங்கு ஏற்கனவே தங்கியிருந்த அவர்களின் உறவினர்களுடன் இணைந்து கொண்டனர்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் முயற்சியில் விழுப்புரத்தில் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், பழங்குடி அமைப்பினரும் கலந்துகொண்டனர். எங்கள் குழுவிலும் மூவர் பங்குபெற்றனர். சி.பி.ஐ விசாரணை, அடையாள அணிவகுப்பு நடத்தி வன்புணர்ச்சி செய்த போலீசாரைக் கைது செய்வது, வழக்கை ஊற்றி மூட முயற்சிக்கும் டி.ஐ.ஜி சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது, பொய் வழக்குப் போடப்பட்டவர்களை விடுதலை செய்வது முதலாக அன்று எடுக்கப்பட்ட தீர்மானகளுக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் அளித்துச் செய்திகள் வெளியிட்டன.

இதற்கிடையில் இன்று வழக்குரைஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான பொது நல வழக்கொன்றைத் தொடுத்தார். குற்றமிழைத்த போலீசார் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென அதில் கோரப்பட்டிருந்தது.

நிலைமை சிக்கலாவதை அறிந்து களத்திற்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி திரு ஷைலேந்திர பாபு சம்பவ நாளன்று பாதிக்கப்பட்ட பெண்களைக் கடத்திச் சென்ற ஐந்து காவல் துறையினரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.

நவம்பர் 29, செவ்வாய்

இன்று காலை இதழ்களில் வெளியான முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. பாதிக்கப்பட்ட நான்கு இருளர் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், 22அன்று இரவு அப்பெண்களை வேனில் கடத்திச் சென்று வைத்திருந்தது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமனாதன், தலமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் பக்தவத்சலம், கார்த்திகேயன் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் அவரது அறிக்கையில் கண்டிருந்தது. நீதித் துறை நடுவரது விசாரணை நடைபெறுவதாகவும் குற்றம் நிறுவப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று நீதித் துறை நடுவர் முன் நிறுத்தப்பட்டவுடன், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அவர் ஆணையிட்டர். சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் முடிந்து நீதித் துறையும் முதலமைச்சரும் தலையிட்ட பின்பு இன்று மதியம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். இத்தனை நாட்களுக்குப் பின் மேற்கொள்ளப் படும் பரிசோதனையில் ஏதும் பயனிருக்குமா?

நவம்பர் 30, புதன்

மருத்துவப் பரிசோதனை முடிந்து இன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் பெண்கள் நால்வரும் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர், அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது முன்குறிப்பிட்ட தங்கமணி தனது காரில் அவர்களை ஏற்றி மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குக் கடத்த முயன்றார். ஃப்ரன்ட்லைன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் திரு துரைராஜ் அவர்களுக்குச் சம்பவ இடங்களைச் சுற்றிக் காட்டும்பொருட்டு அங்கு வந்திருந்த பேரா. கல்யாணி, விருப்பத்திற்கு மாறாக ஏன் அவர்களைக் கடத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். “ இவ்வளவு நாள் எங்கே போனிர்கள்? அவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள். அவர்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வோம். சி.பி.எம் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப் போகிறோம்” என்று தங்கமணி சொல்லியுள்ளார். அங்கிருந்த அவர்களது தோழர்கள் “ஆமாம் அவங்க ஆட்களோட அவங்க போகட்டும். நீங்க தலையிட வேண்டாம்” எனப் பஞ்சாயத்துச் செய்துள்ளனர். அவர்கள் சி.பி.எம் கட்சிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டுமென கல்யாணி எங்களிடம் கூறினார். உடனடியாக அங்கு நின்றிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பன்னீர்செல்வத்திடம் கல்யாணி இது குறித்து முறையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அப்பெண்களிடம் தனித் தனியே இருமுறை விசாரித்தார். அவர்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் ரமேஷுடன்தான் போவோம்” என உறுதியாகக் கூறியுள்ளதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் அப்பெண்களை ரமேஷுடன் அனுப்பியுள்ளார்.

இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகக் காலையிலும், அவர்களின் மாதர் சங்கம் சார்பாக மாலையிலும் திருக்கோவிலூரில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

டிசம்பர் 01, வியாழன்

இன்றும் திருக்கோவிலூர் நீதித் துறை நடுவர் விசாரணையைத் தொடர்ந்தார். விசாரணை முடிந்தவுடன் மறுபடியும் தங்கமணி சுமார் 10 பேர்களுடன் வந்து கடத்த முயன்றுள்ளார். அங்கிருந்த சங்கப் பொறுப்பாளர்களான ரமேஷ், வீராசாமி, நாகராஜன், தமிழ் வேங்கை ஆகியோர் அம் முயற்சியை முறியடித்துள்ளனர்.

டிசம்பர் 02, வெள்ளி

இன்று காலை நாங்கள் திண்டிவனம் சென்று பேரா. கல்யாணி அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சம்பவங்களைக் கோர்வையாகச் சொன்னதோடு உரிய ஆவணங்கள் எல்லாவற்றையும் தந்துதவினார். பாதிக்கப்பட்ட பெண்களைத் தங்கமணி கடத்த முயன்றது தொடர்பாக காவல் துறை இயக்குனருக்குப் புகார் ஒன்றை இன்று அனுப்ப இருப்பதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து நாங்கள் விழுப்புரம் வழியாகத் திருக்கோவிலூர் மண்டபம் சென்றோம். இருளர் குடிசைகளின் அருகில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பாக பாதிக்கப்பட்ட பெண்களை ஒவ்வொருவராக அழைத்து காவல் துறை அதிகாரிகள் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அவர்களைத் தொந்தரவு செய்யாவண்ணம் அருகே அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட பிற பெண்களையும், பி.வி.ரமேஷையும், அப் பெண்களின் வழக்குரைஞர் ஃப்ரீடாவையும் சந்தித்துப் பேசினோம்.

மாலையில் விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் பங்குபெற்றோம். பல்வேறு பழங்குடி அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு கூடியிருந்தனர். பழங்குடி மக்கள் முன்னணியின் நிறுவனர் திரு. சுடரொளி சுந்தரம் தலமை தாங்கினார். முந்தைய தீர்மானங்களை இக்கூட்டம் வலியுறுத்தியதோடு, இப்பிரச்சினை தொடர்பாகத் தமிழகம் முழுவதிலும் கண்டனக் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் முதலியவற்றை நடத்துவது எனவும் முடிவு செய்தது, தங்கமணியின் செயலைப் பலரும் கண்டித்தனர்.

டிசம்பர் 03, சனி

இன்றும் மண்டபத்தில் வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் அப் பெண்களிடம் காவல் துறையினரின் விசாரணை தொடர்ந்தது.

இன்று தங்கமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார், அதன் நகல்கள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளருக்கும், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளருக்கும் அனுப்பப்பட்டன. இதில் பத்தர் சாதியைச் சேர்ந்த ரமேஷும் கள்ளர் சாதியைச் சேர்ந்த கல்யாணி என்பவரும். முதலமைச்சர் 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்களைத் தம்முடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செய்ய முயன்றதாகவும் இதில் தலையிட்டபோது தம்மை அவர்கள் இருவரும் அடித்து உதைத்ததோடு “இருளர் தேவடியா மகனே” எனத் திட்டியதாகவும் புகார் கூறப் பட்டிருந்தது.

பழி தீர்க்கக் காத்துக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினர் இந்தப் புகாரின் அடிப்படையில் பேரா. கல்யாணி மற்றும் பி.வி.ரமேஷ் ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 294 பி, 323, 506(2) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 310 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

டிசம்பர் 05, திங்கள்

பழங்குடி இருளர் சங்கப் பொறுப்பாளர்களும் மக்கள் கண்காணிப்பகப் பொறுப்பாளர் ஆ. ஜெயராமனும் இன்று கடலூர் சிறைக்குச் சென்று காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு இருளர்களையும் சந்தித்த போது அங்கு அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துருந்தது. 4 நாட்கள் இவர்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட போது இவர்களோடு இன்னும் மூவரும் அங்கு கொண்டுவரப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் வன்புணர்ச்சி செய்யப்பட்ட கார்த்திகாவின் தந்தை முருகேசன். இவர் திருவள்ளூர் மாவட்டம் பனம்பாக்கத்தில் உள்ள அம்பாள் சேம்பரிலிருந்து போலீசாரால் கடத்தி வரப்பட்டுள்ளார். கடலூரில் பெண்ணை ஆற்றோரம் குடியிருக்கும் இவரின் உறவினர்களான முருகன் மற்றும் கோபால் ஆகியோரைத் தஞ்சாவூரில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த இடத்திலிருந்து இவ்வாறே அடுத்தடுத்த நாட்களில் கடத்திக் கொண்டு வந்துள்ளனர். விழுப்புரம் தாலுக்கா காவல் நிலயத்திலும், பின்னர் விழுப்புரம் லாட்ஜ் ஒன்றிலும் வைத்து இவர்கள் 9 பேர்களும் ம் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடம்பில் காயங்களுள்ளன. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தலையிட்டு நவம்பர் 26ல் புகாரளித்து, பிரச்சினை ஊடகக் கவனம் பெற்ற பின்னரே தினகரன் இதழ் எழுதியதைப் போல ‘அவசர அவசரமாக’ இவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பொறுப்பு டி.ஐ.ஜியாகப் பதவி வகித்து வந்த சக்திவேல் அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவரிடத்தில் திரு. பொன். மாணிக்கவேல் டி ஐ.ஜியாக நியமிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று விழுப்புரத்தில் கூடிய பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் செயற்குழு, பழைய கோரிக்கைகளோடு கல்யாணி, ரமேஷ் ஆகியோர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எல்லவற்றையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் சேர்த்து வலியுறுத்தி டி.ஜி.பியையும், சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் 9 பேர்களையும் விடுதலை செய்யக் கோரி புதிய டி.அய்.ஜி மாணிக்கவேல் அவர்களையும் சந்திப்பது எனவும் முடிவெடுத்தது.

டிசம்பர் 9, வெள்ளி

ஆங்காங்கு பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டங்கள் முதலியன நடைபெற்றன. டி ஐ ஜி உட்பட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொய் வழக்கு போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பன முக்கிய கோரிக்கைகள். காவல் துறை சும்மா இருக்குமா? இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம், காவல் துறையினரின் குடும்பத்தினர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற சீருடைப் பணியாளர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை நடத்தின. கல்யாணி, ரமேஷ் ஆகியோர் ஒழிக என அதில் முழக்கம் எழுப்பப்பட்டது.

டிசம்பர் 13, செவ்வாய்

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட உண்ணா விரதப் போராட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவருமான திரு. ந. நஞ்சப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 20, செவ்வாய்

இன்று நாங்களும் பேரா. கல்யாணி, சுடரொளி சுந்தரம், இருளர் சங்கத் தலைவர் ஜெயபாலன் ஆகியோரும் டி.ஜி.பி ராமானுஜம் அவர்களைச் சந்தித்த போது, அவர் பழங்குடியினர் பிரச்சினைகளில் தலையிடும்போது இனி காவல் துறை கவனமாக இருக்கும் என்றார். எனினும் காவல் துறையினர் கணக்கு முடிப்பதற்கெனப் பொய் வழக்குப் போடுவதில்லை என அவர் உறுதிபடக் கூறியதும், பாதிக்கப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டில் ஐயம் இருந்ததாலேயே அன்று இரவு அவர்களை விசாரிக்க நேர்ந்தது எனக் கூறியதும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும் குற்றமிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சிறையிலுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வது முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம்.

எமது பார்வைகள்: 

1. இந்தப் பிரச்சினையைப் பொருத்த மட்டில் காவல் துறையினர் மூன்று குற்றங்களைப் புரிந்துள்ளனர். (i) பெண் காவலர்கள் யாருமின்றி பெண்களை இரவு நேரத்தில் வன்முறையாகக் கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்தது. (ii) கண்டு பிடிக்க இயலாத குற்றங்களைக் கண்டு பிடித்து விட்டதாகக் கணக்கு முடிப்பதற்கென 9 அப்பாவி இருளர்களைக் கடத்திச் சென்று, அவர்களை சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்தது; இவர்களைப் பிடித்துச் செல்லும்போது வீட்டில் இருந்த நகைகள், பணம், செல்போன்கள் முதலியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றது. (iii) கீழ்மட்டக் காவல் துறையினர் செய்த மிகக் கடுமையான குற்றங்களை மூடி மறைக்க மேல் மட்ட அதிகாரிகள் முயற்சி செய்தது; புகாரின் அடிப்படையில் பாதிக்கப் பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் சுமார் 16 மணி நேரம் அவர்களைத் தூங்க விடாமல் மிரட்டி கட்டாயமாக அவர்களிடம் பொய் வாக்குமூலம் ஒன்றைப் பெற்று, அதை ஊடகங்களில் வெளியிட்டதோடு “mistake of fact” என்பதாக வழக்கை முடிக்க முயற்சித்தது.

இந்தக் குற்றங்கள் மூன்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருபவை. முதலிரண்டு குற்றங்களும் கைது செய்வது தொடர்பான உச்ச நீதி மன்றம் டி.கே. பாசு வழக்கில் வழங்கியுள்ள நெறிமுறைகளை அப்பட்டமாக மீறியவை. முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியும், Political Violence and the Police in India (Sage Publications, 2007) என்னும் மிக முக்கியமான நூலின் ஆசிரியருமான டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் தனது நூலில் இந்தியக் காவல் துறையினர் வழக்கமாக நீதியை முறியடிக்கும் முயற்சிகள் குறித்து இட்டுள்ள பட்டியலில் உள்ளவற்றிற்குச் சான்றாக அமைபவை.

கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்கிற நிலையிலிருந்து பழங்குடி இருளர்களை இருளர் அமைப்புகள் சமீப காலங்களில் மீட்டுள்ளன. எனினும் இவர்களைக் குற்றப் பரம்பரையினராகவே அணுகுகிற போக்கைக் காவல் துறை தொடர்ந்து கடை பிடித்து வருகிறது. கீழ் மட்டக் காவல் துறையினர் மட்டுமின்றி மேல் மட்ட அதிகாரிகளும், பெண் காவலர்களும் கூட இத்தகைய மனநிலையையே கொண்டிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வருகிற மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களில் 60 சதத்திற்கும் மேற்பட்டவை காவல் துறையினரின் அத்து மீறல்கள்தான் என்கிறார் இது குறித்து ஆய்ந்துள்ள ஜெயதிலக் குஹபா ராய் (Human Rights for the 21st Century, IIPA, 2004).

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனகம் வெளியிடப்பட்ட பின் உருவாக்கப் பட்ட நமது அரசியல் சட்டம் டாக்டர் அம்பேத்கர் முதலானோரின் முயற்சியால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால் நமது குற்ற நடைமுறைச் சட்டங்களும் இந்தியப் போலீஸ் சட்டமும் (1861) பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் உருவாக்கப் பட்டவை. சுதந்திர இந்தியா இதனை அப்படியே ஏர்றுக் கொண்டது. நமது அரசியல் சட்டத்தின் தொனிக்கோ, ஒரு ஜனநாயக ஆளுகைக்கோ முற்றிலும் பொருத்தமற்றவையாக இவை உள்ளன. காவல் துறைச் சீர்திருத்தம் குறித்து இங்கு 1885 முதல் பேசப்பட்டு வருகிறது. எனினும் இன்று வரை இந்தத் திசையில் எதுவும் நகர்ந்ததில்லை. இது தொடர்பாகத் தேசிய காவல் துறை ஆணையம் எட்டு தொகுதிகளில் அளித்த அறிக்கையும், எல்.பி.சிங் குழுவின் அறிக்கையும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

உடனடியாக இங்கு காவல் துறை, உளவுத் துறை மற்றும் குற்ற நடைமுறைச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் அவசியம். உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்டக் காவல் துறையினர் வரை எல்லோருக்கும் இது தொடர்பான உணர்வூட்டும் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பெண்ணுரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும். டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த நெறிமுறைகளை வெறுமனே காவல் நிலையங்களில் ஒட்டி வைத்தால் மட்டும் போதாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கைது தொடர்பான நெறிமுறைகள் ஆகியவற்றை மீறும் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும்.

இவ்வழக்கைப் பொருத்த மட்டில் தற்போது தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அய்ந்து காவல் துறையினர் தவிர, 9 பேர்களைச் சட்ட விரோதமாக நான்கு நாட்கள் காவலில் வைத்திருந்தது, சித்திரவதை செய்தது, பொய் வழக்குப் போட்டது, வீட்டிலும் பிற இடங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை கடலூர் பேருந்து நிலையத்தில் கைது செய்ததாக நீதிமன்றத்தில் பொய் கூறியது ஆகிய குற்றங்களுக்குக்குக் காரணமான ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் காவலர்கள், நான்கு பெண்களையும் மிரட்டி, தாங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க்கப் பட்டதை மறுத்துரைக்க வைத்த டி.ஐ.ஜி சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளர் ரேவதி, பெண் காவலர்கள் மல்லிகா, வசந்தா ஆகிய அனைவர்மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4 உட்படப் பொருத்தமான இதர சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும்.

2. தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அளித்ததோடு, காவலர்கள் மீது குற்றம் நிறுவப் பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது. எனினும் முதல்வர் அவர்களின் கவனத்திற்குச் சில செய்திகள் : புகழேந்தி தொடுத்த பொதுநல வழக்கை விசாரிக்கையில் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் குறிப்பிட்டதுபோல “இழப்பீடு வழங்குவது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்டி விடாது. வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….காவல் நிலையத்திற்கு ஒரு பெண் சென்று ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, அவர் தன்னை வன்புணர்ச்சி செய்தார் எனச் சொன்னால், அவரை உடனடியாகக் கைது செய்வதற்கு அங்குள்ள போலீஸ் அதிகாரி தயங்குவதில்லை. அப்படியுள்ளபோது ஏன் சாதாரண மனிதன் மீது செயல்படுத்தப்படும் ஒரு சட்டம் போலீஸ்காரர்கள் மீது செயல்படுத்தப் படுவதில்லை?” நவம்பர் 28 அன்று தலைமை நீதிபதி உங்கள் அரசை நோக்கி வைத்த கேள்வி இது. ஆனால் இன்று வரையிலும் அடையாள அணிவகுப்பு நடத்தவோ, இல்லை யாரையும் கைது செய்யவோ இல்லை.

அடுத்த சில நாட்களில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி அவர்கள், இவ்வழக்கைப் பற்றிச் சொல்லி காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு sovereign immunity கிடையாது என்பதச் சுட்டிக் காட்டவும் செய்தார். அதாவது கவர்னர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அத்தகைய பதவியில் இருப்பதாலேயே சட்ட நடவடிக்கைகட்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப் படுவர். அத்தகைய தண்டனை விலக்கு எதுவும் போலீஸ்காரர்களுக்குக் கிடையாது. ஆனாலும் உங்கள் அரசு இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. ஒன்பது பேர்கள் பல நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். 26ந் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அளித்த புகாரில் இவர்களில் அறுவர் திருக்கோவிலூர் காவலர்களால் 22 அன்று கடத்தப்பட்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரை மறுக்காமல் காவல் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. சட்ட விரோதக் காவலில் அவர்கள் 4 நாட்கள் வைக்கப்பட்டுள்ளதை காவல்துறை ஏற்றுக் கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. எனினும் ஆய்வாளர் தமிழ் மாறன் தலைமையிலான காவற்படையினர் மீதும் இதுவரை நடவடிக்கையில்லை.

பாதிக்கப்பட்ட பெண்களக் கட்டாயப்படுத்திப் பொய் வாக்குமூலம் அளிக்கச் செய்த டிஐ.ஜி.சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் மீதும் நடவடிக்கையில்லை.

குற்றமிழைத்துள்ள அதிகாரிகளையும் காவலர்களையும் அரசும் காவல் துறையும் காப்பாற்ற முயற்சிக்கின்றன என்கிற நியாயமான அய்யத்தை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இது ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டுமென்கிற அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

எனவே இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.அய் விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஆணையிட வேண்டும். பேரா.கல்யாணி, பி.வி. ரமேஷ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கு, கல்யாணி கொடுத்துள்ள புகார் ஆகியவற்றையும் மற்றவற்றுடன் இணைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

3. முதல்வர் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள்: இந்தக் கொடுமை நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் உயரதிகாரிகளின் மாநாடொன்றில் உங்கள் ஆட்சியில் காவல்துறை முழுச் சுதந்திரத்துடன் செயல்படலாம் எனக் கூறினீர்கள். வெளிப் படைஎடுப்புகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் இராணுவத்துடன் ஒப்பிட்டு “உள் ஆபத்துக்களை எதிர் கொள்பவர்கள் காவல்துறையினர்” எனச் சொன்னீர்கள். போலீஸ்காரர்கள் மட்டும் பொருட்களை விலை குறைவாகப் பெறும் போலீஸ் கான்டீன்கள் திறக்கப்படும் எனவும் கூறினீர்கள். காவல் துறை மட்டுமின்றி எல்லா அரசுத் துறைகளுமே சுதந்திரமாகச் செயல்பட வேண்டியவைதான். அப்படியின்றி காவல் துறைக்கு மட்டும் இப்படியான சிறப்பு அறிவிப்புகளை நீங்கள் செய்யும்போது, அதை அவர்கள் அத்து மீறுகிற உரிமை (sovereign immunity) அளிக்கப்பட்டதாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாகவே உங்கள் ஆட்சி ஒரு போலீஸ் ஆட்சியாகவே இருக்கும் என்றொரு கருத்து மக்கள் மத்தியில் உள்ளது என்பதையும் நீங்கள் மறந்துவிடலாகாது. எனவே இப்படியான அறிவிப்புகளைச் செய்வதைத் தாங்கள் தவிர்க்க வேண்டும்.

4. பாதிக்கப்பட்ட பெண்கள் நால்வரையும் கடத்த முற்பட்டது குறித்து தங்கமணி மீது பேரா. கல்யாணி டிசம்பர் 2ந் தேதி அளித்த புகார்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத காவல்துறை, கல்யாணி மற்றும் பி.வி.ரமேஷ் ஆகியோர் மீது தங்கமணி அளித்த பொய்ப் புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. முன் குறிப்பிட்டவாறு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உட்பட பிணையில் வர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது

தகவல் அறிந்த நாங்கள் இது குறித்துக் கல்யாணியுடன் தொடர்பு கொண்ட பொழுது அவர், “இதைப் பெரிது படுத்தினால் நான்கு இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை உட்பட இதர பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படும். சற்றுப் பொறுமையாக இருப்போம்” என்றார். தவிரவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பிரயோகப் படுத்தப்படுதல் குறித்த பொய்ப் பிரச்சாரத்திற்குத் துணை போவதாகவும் ஆகிவிடும் என்பதால் இதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் பெறும் உரிமை கிடையாது. ஆனாலும் இவ்வழக்குகளில் மறைமுகமாக உயர் நீதி மன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெறப்படுகிறது. இந்த நடைமுறையை நாங்கள் எதிர்த்து வருவதால் அந்த முயற்சியிலும் இறங்கவில்லை.

பிற கோரிக்கைகளோடு இது குறித்தும் ஒரு கோரிக்கையைப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு இப்போது இணைத்துள்ளது. கல்யாணி மீது புகார் பதிவு செய்யப் பட்டுள்ளதைப் போலவே கல்யாணி கொடுத்த புகார் மீதும் வழக்கைப் பதிவு செய்து பிற வழக்குகளொடு இணைத்து சி.பி.ஐ விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதே அது. அதற்குமேல் இப்பிரச்சினைக்கு கூடுதல் முக்கியத்துவம் தவிர்க்கப்பட்டது

இது குறித்துப் பேசும்போது தவிர்க்க இயலாமல் விழுப்புரம் சி.பி.எம் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்களை தங்கமணி கடத்தியது குறித்தும் சொல்ல நேரிடுகிறது. தேவையில்லாமலும் உள் நோக்கத்துடனும் மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர் இழுக்கப் படுவதாக அவர்கள் தரப்பில் ஒரு வருத்தம் இருப்பதை அறிந்த நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பழங்குடியினருக்கான அமைப்பான மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் தோழர் பெ. சண்முகம் அவர்களை நவம்பர் 20 அன்று தொடர்பு கொண்டோம். அவர் விரிவாக விளக்கமளித்தார். தங்கமணிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், ஒரு நாள் இரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் வந்த அவர் தங்குவதற்கு இடமில்லை என்றதால் தங்கள் அலுவலகத்தில் தங்க அனுமதித்ததகவும் கூறினார். அடுத்த முறை அவர் நீதிமன்ற வாசலில் பிரச்சினை செய்த பொழுது அங்கே சில மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் இருந்தது உண்மைதான், ஆனால் இந்தப் பிரச்சினை முடிந்த பின்பே அவர்கள் அங்கு சென்றனர் என்றார். எப்படியும் உங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு நாள் அவர்களைக் கொண்டு வந்து தங்க வைத்துள்ளார். அடுத்த முறையும் உங்கள் அலுவலகத்திற்குத்தான் கொண்டு செல்வதாகச் சொல்லி வம்பு செய்துள்ளனர். காலமெல்லாம் வன்கொடுமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் போராடிவரும் கல்யாணி மீதே அச் சட்டப் பிரிவின் கீழ் இன்று அவர் புகார் கொடுத்துள்ளார். கல்யாணியும் ரமேஷும் கைது செய்யப்படக் கூடிய சூழலும் உள்ளது. நீங்கள் இதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்கிறீர்கள், ஏன் நீங்கள் தங்கமணிக்கும் உங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெளிப்படையாகச் சொல்லக் கூடாது எனக் கேட்டோம். எங்களிடம் அப்படியான புகார் எதுவும் கல்யாணியிடமிருந்து எழுத்து மூலமாக வராதபோது எப்படி நாங்கள் விளக்கமளிக்க முடியும் என ஒரு அரசு அதிகாரிபோல சண்முகம் வினவினார்.

தங்கமணிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தோழர் சண்முகம் குறிப்பிடுகிறார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆனந்தனோ தங்கமணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் இப்பிரச்சினையில் இணைந்தே செயல்பட்டதாகக் கூறுகிறார். திருக்கோவிலூர் இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ‘மக்கள் கண்காணிப்பகம்’ வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கையில் ஆனந்தன், அவ்வமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் ஜெயராமனிடம் கூறியவை பதிவு செய்யப் பட்டுள்ளன. அதிலிருந்து சில வரிகள் :

“ நவம்பர் 27ந் தேதி வந்த தங்கமணி இந்தப் பிரச்சினையைத் தமிழக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார். அன்று இரவு பாதிப்படைந்த பெண்களை எங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தங்கவைத்தார்…. எங்கள் கட்சியின் செயல்பாட்டின் விளைவாகத்தான் அந்தப் பெண்களுக்கு இழப்பீடு கிடைத்தது. காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பேரா.கல்யாணி போன்றவர்கள் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றிருந்தால் தமிழக அரசு செவி சாய்த்திருக்காது……இருளர் அமைப்பு நடத்தி வந்த தங்கமணி ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் இணைந்து செயல்பட்டார். பேரா. கல்யாணி பாதிப்படைந்த பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல் மெத்தனமாக இருந்து வந்தார். இதை ஆரம்பத்திலிருந்தே தங்கமணி கவனித்து வந்தார். நாங்கள் பாதிப்படைந்த பெண்களுக்கு ஆதரவாக டிசம்பர் 30 அன்று திருக்கோவிலூரில் நடத்திய ஆர்பாட்டத்தில் நிறைய இருளர் சமூக்த்தினருடன் தங்கமணி பங்கேற்றார். கல்யாணி மீதும் ரமேஷ் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கமணி புகார் கொடுத்துள்ளதாகக் கேள்விப் பட்டோம். அவரே கொடுத்தாரா, காவல் துறையின் தூண்டுதலால் கொடுத்தரா என்று எங்களுக்குத் தெரியாது”

இந்தக் கூற்றைக் கவனமாக வாசிப்பவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தங்கமணிக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். கல்யாணி மீது இப்படியான ஒரு புகார் கொடுக்கப்பட்ட பின்பு அளிக்கப்பட்ட கூற்று இது என்பது குறிப்பிடத் தக்கது. கல்யாணி மெத்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டும் ஆனந்தன் தங்கமணியின் அக்கறையைப் பாராட்டுகிறார். ஆரம்பத்திலிருந்தே தங்கமணியுடன் இணைந்து செயல்பட்டதாகப் பெருமையுடன் கூறும் ஆனந்தன், அவர் கல்யாணி மீது கொடுத்த புகார் குறித்து மட்டும் தனக்குத் தெரியாது என்று கைவிரிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரொம்பத் தாமதமாகவேனும் இடதுசாரிகள் தீண்டாமை மற்றும் பழங்குடியினர் பிரச்சினைகளையெல்லாம் கையிலெடுத்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் நாங்கள். ஆர்வமுடன் கவனித்து வருவது மட்டுமின்றி சாத்தியமான சந்தர்ப்பங்களில் இணைந்தும் செயல்பட்டுள்ளோம். எங்களது கட்டுரைகளிலும் அறிக்கைகளிலும் பாராட்டியுமுள்ளோம்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைகளில் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுயேச்சையான அமைப்புகளும் கட்சிகளும் உருவாகிச் செயல்டுகின்றன. உங்களைப் போன்றவர்களும் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். எங்களைப் போன்ற சிறிய அமைப்புகளும் பங்களிப்பைச் செய்து வருகிறோம். பலரும் செயல்பட்டு வருகிற களத்தில் நாமும் ஒருவர் என்கிற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவது முக்கியம். நாமே எல்லாம் எனச் செயல்படுவதற்கு இது காலமில்லை. உத்தபுரம், வாச்சாத்தி, சமச்சீர்க் கல்வி முதலான பிரச்சினைகளில் உங்கள் அமைப்பினர் பேசிய பேசுக்களையும் எழுதியுள்ள கட்டுரைகளையும் வாசித்தீர்களானால், நாங்களே எல்லாம் என்கிற தொனி ஆபாசம் என்கிற எல்லையைத் தொடும் அளவிற்கு அவற்றில் அமைந்துள்ளதை உணர முடியும். இது பிறரிடமிருந்து மட்டுமல்ல மக்களிடமிருந்தும் உங்களை அந்நியப்படுதிவிடும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கி முழு நேரமாகப் போராடி வரும் நாடறிந்த ஒரு போராளியை மெத்தனமாக இருந்தார் எனவும், எங்களால்தான் எல்லாம் நடந்ததெனவும் சொல்வதெல்லாம் என்ன நியாயம். வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்ப் பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் பக்கபலமாக இருப்பது மக்கள் கண்களில் படாமல் போய்விடாது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்..

5. இப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததிலும், குற்றத்தை மறைக்க காவல் துறை அதிகாரிகள் சிலர் செய்த சதிகளை முறியடித்ததிலும் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளுக்கு எங்கள் பாராட்டுக்கள். பெரிய அளவில் ஊடகப் பெருக்கம் நடந்துள்ள நிலையில் உண்மைகளை அவ்வளவு எளிதாக மறைத்துவிட இயலாது என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் உணர்வது நல்லது.

6. வை.கோ, விஜயகாந்த் ஆகியோர் இது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இடதுசாரிக் கட்சிகளும் குறிப்பிடத்தக்க பங்காற்றின. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் ம்தலான பிற அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இப்பிரச்சினையைக் கண்டு கொள்ளாதது கவனத்திற்குரியது.

7. இப்பிரச்சினையை ஒட்டிப் பல்வேறு இருளர் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*