இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நேரில் சந்தித்து புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.
தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் என்பது அப்பட்டமான இனவெறி என்பதோடு குற்றமாகும்.
இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.
இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.
Leave a Reply