மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் அண்மைக் காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி என சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு வேலைப் பார்ப்பதை தவிர்த்து ஊழலில் திளைத்து வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட அதிகாரிகளே சட்டம் ஒழுங்கு பிரிவில் இருப்பது ஊழலுக்கு வழிவகுப்பதுடன் நிர்வாக சீர்கேட்டை உண்டாக்குகிறது. போலீசாரிடையே செயல்திறன் குறைந்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஐ.ஜி. ஷர்மாவின் செயலற்ற போக்கே காரணம். அவர் புதுச்சேரியில் தங்கி இருந்து பணியாற்றுவதே இல்லை. பல நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு டில்லி சென்று விடுகிறார். அவர் மீது சி.பி.ஐ. தொடுத்த பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவ்வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கவனம் செலுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கைக் காப்பற்றுவது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. ஊழல் அதிகாரியான அவரை மத்திய அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற ஊழல் அதிகாரிகளை மத்திய அரசு புதுச்சேரியில் பணி செய்ய அனுப்பி வைப்பதை நிறுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பு வழங்கிடவும், நிலைமைகளைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply