மனித நேயத்திற்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்துவதா? மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிராக அரசியல் லாபத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய காங்கிரசாரின் போக்கை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கோரி காங்கிரசார் இன்று புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரசாரின் இப்போராட்டம் மனித நேயமுடைய அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ராஜீவ் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் ஜெயின், வர்மா ஆகியோரின் தலைமையிலான விசாரணை கமிஷன்கள் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு பல்நோக்கு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவும் ராஜீவ் கொலையின் பின்னணி பற்றி விசாரணை செய்து வருகிறது.

இவ்விசாரணை முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மூவரையும் தூக்கிலிடுவது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை இந்த விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்ப வருமா?
காங்கிரசாருக்கு உண்மையில் ராஜீவ்காந்தி மீது அன்பிருந்தால் இந்த விசாரணையை வேகப்படுத்தி, இக்கொலைக்கு பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த கோருவதுதான் சரியான வழி முறையாக இருக்கும். அதைவிடுத்து மூவரையும் தூக்கிலிட உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல.

மூவரின் உயிரோடு தொடர்புடைய மனித உரிமைப் பிரச்சனையை காங்கிரசார் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதைப் பொதுமக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று சோனியா காந்தி நாடு திரும்பிய பின்னர்தான் இதுபோன்ற போராட்டங்கள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி படுகொலையும் பதிலளிக்கப்படாத கேள்விகளும், கேட்கப்படாத கேள்விகளும் (The Assassination of Rajiv Gandhi – Unansered Questions and Unasked Queries) என்ற தலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலையில் தற்போதைய காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பு உள்ளது என கூறியுள்ளதற்கு காங்கிரசார் யாரும் இதுவரையில் பதில் அளிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? ராஜீவ் கொலையில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல உள்ள நிலையில் குற்றவாளிகள் எனக் கூறி மூவரையும் தூக்கிலிடுவது சரியா? என்பது பற்றி காங்கிரசார் விளக்க வேண்டும்.

இன்று உலக அளவில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கணக்குப்படி 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகம் தழுவிய பிரச்சாரமும் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மரண தண்டனைக்கு ஆதரவாக காங்கிரசார் போராடுவது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தும்.

“சிறைத் தண்டனையை திரும்பப் பெற முடியும். உடலுக்கு ஊறு செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்ய முடியும். ஆனால், ஒருவரை சாகடித்து விட்டால், அந்த தண்டனையை திரும்பப் பெற முடியாது. இழப்பீடு செய்யவும் முடியாது” என மகாத்மா காந்தி கூறியதை மரண தண்டனைக்கு ஆதரவாக போராடும் காங்கிரசாருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக காங்கிரசார் நடத்தும் போராட்டத்தை பொது மக்கள் புறந்தள்ளி மனித உரிமைகளைக் காக்க உறுதியேற்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*