மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் நடந்த போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. சபை அறிக்கையை ஏற்று, அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை 3 பேர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இக்குழு அங்கு ஆய்வு செய்து கடந்த மார்ச் 31 அன்று தனது 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் 26 அன்று அதனை முறைப்படி வெளியிட்டது.
இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் இந்த அறிக்கை அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை அரசு மீது 5 குற்றச்சாட்டுகளும், போராடிய இயக்கத்தின் மீது 6 குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இலங்கை அரசு போரில் சிக்கியுள்ள பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுவோம் என உறுதி கூறியதை மீறி அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையும், சட்டங்களையும் வெளிப்படையாக மீறியுள்ளது.
செப்டம்பர் 2008 முதல் 19 மே 2009 வரையில் நடந்த போரில் வன்னிப் பகுதியில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் போரில் சிக்கித் தவித்துள்ளனர் என்றும், 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டு வீசி தாக்குதல், மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மறுப்பு, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுவோர் மீது மனித உரிமை மீறல்கள், போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகத் துறையினர், அரசை விமர்சித்தவர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் என 5 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐ.நா. சபை சுமத்தியுள்ளது.
மேலும், இந்த கொடிய போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், போரில் உயிரிழந்தோர் உடல்களைக் கண்டுபிடித்து இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், போரினால் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும், முகாம்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கையில் நிலவும் அவசர கால உத்தரவை திரும்ப பெற்று, அங்கு அமலிலுள்ள அடக்குமுறை சட்டங்களை சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு உட்பட்டு திருத்த வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு கூறியுள்ளது.
ஆனால், ஐ.நா. சபையின் அறிக்கையை குப்பையில் போட்ட இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற இதுநாள்வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைக் கவலை அடைய செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த போக்கை மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் பற்றியும், அதற்கு முழுப் பொறுப்பான இலங்கை அதிபர் ராஜபட்சே மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படவும் சர்வதேச சமுகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
Leave a Reply