மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இந்த கல்வி ஆண்டின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு பொறுப்பேற்பதுடன், இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உடனே வெளியிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இணைச் செயலாளர் டாக்டர் தவீந்தர் குமார் 11.04.2011 தேதியிட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிப்பதற்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா மற்றும் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு கடந்த 2011, பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது.
இக்குழு தாக்கல் செய்த மதிப்பீட்டு அறிக்கையை ஏற்று மருத்துவ கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகள், கருத்துக்கள் அடிப்படையிலும் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவால் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. இதனால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவோம் என மாணவர்கள் கண்ட கனவு நிறைவேறாமல் தகர்ந்துள்ளது.
மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு ஒதுக்கீடான 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களைக்கூட வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வருகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளை நிர்பந்தித்து 50 சதவீத இடங்களைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசே வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியை வளர்ச்சி அடைய செய்யாமல் முடக்கி, ஒரு கட்டத்தில் மூடிவிட புதுச்சேரி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மேம்படுத்தவே முடியாத இவர்கள் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்குவோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அரசு மருத்துவ கல்லுரியில் இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் மாணவர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி அரசை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டி அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.
Leave a Reply