மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.
தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகக் கடசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்பதோடு, தமிழக கட்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஈழத் தமிழர் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Leave a Reply