அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!


பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் புதுச்சேரி போலீசார் ஆறு பேர் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

விழுப்புரம் வட்டம், செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. இவர் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு (29.7.1993) ஒரு திருட்டு வழக்கில் வெள்ளையன் என்பவரைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறு பேர், வெள்ளையனின் உறவினரான விஜயாவை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக புகார் எழுந்தது. அப்போது விஜயாவுக்கு வயது 17.

இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய அப்போதைய திண்டிவனம் சார் ஆட்சியர் ஜவகர் இ.ஆ.ப. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி புகாரில் முகாந்திரம் உள்ளது எனக் கண்டறிந்தனர். இதனையடுத்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் புதுச்சேரி போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கா.நி.கு. எண். 276/1993.

செஞ்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இரா.செல்வராஜ் தலைமையில், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த வ.சு.சம்பந்தம், பேராசிரியர் பிரபா.கல்விமணி, சகோதரி லூசினா உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தது. மேற்படி பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை உறுதிசெய்து 29.9.1993 அன்று புதுச்சேரியில் அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.ஜெகதீசன் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் விரிவான விசாரணை மேற்கொண்டு 7.2.1994 அன்று தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதை உறுதி செய்ததோடு, விஜயாவுக்கு கருணைத் தொகை வழங்கவும் சிபாரிசு செய்தார்.

இவ்விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 31.8.94 அன்று அத்தியூர் விஜயா வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றியும், விஜயாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25000/- கருணைத் தொகையும் வழங்கிட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட விஜயாவுக்கு நீதிக் கிடைக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் குற்றமிழைத்த போலீசாரை கைது செய்யக் கோரி 4.1.1995-இல் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற மாபெரும் பேரணி, மறியல் நடைபெற்றது.

இவ்வழக்கினை புலன் விசாரணை செய்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் கோ.அரிகிருஷ்ணன், புதுச்சேரி போலீசாரான நல்லாம் கிருஷ்ணராய பாபு (அப்போது உதவி ஆய்வாளர்), கே.சசிகுமார் நாயர், வி.இராஜாராம் (இருவரும் அப்போது தலைமைக் காவலர்கள்), ஜெ.பத்மநாபன், கே.முனுசாமி, ஜீ.சுப்புராயன் (அப்போது காவலர்கள்) ஆகிய ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்ச்சி), 333 (கடத்தல்) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் 19.4.1999 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி வழக்கில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விஜயாவுக்கு புதுச்சேரி அரசு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை மேற்கொண்டு விஜயா பாலியல் வன்புணர்ச்சியை உறுதி செய்து 6.5.1999 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.

விஜயாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எம்.ஆர். ஷெரீப்-பை அரசு சிறப்பு வழக்கறிஞராக 21.1.2002-இல் நியமித்தார்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6.7.2004 முதல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விஜயா, விஜயாவின் உறவினார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என 42 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இவ்வழக்கு விசாரணை முடிந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.இரத்தினராஜ், 11.8.2006 அன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பினை தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது இந்திய அளவில் மனித உரிமை அமைப்பினர் வரவேற்றனர்.

இத்தீர்ப்பானை எதிர்த்து புதுச்சேரி போலீசார் ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆயுள் தண்டனை பெற்ற புதுச்சேரி போலீசார் 6.11.2006 அன்று, அதாவது தண்டனைப் பெற்று மூன்றே மாதத்திற்குள் பிணை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். பிணையில் வெளிவந்த காவலர் முனுசாமி விபத்தில் இறந்து போனார்.

புதுச்சேரி போலீசாரின் மேல் முறையீட்டு மனுவின் மீது இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் முன்பு 19.9.2008 அன்று நடந்தது. புதுச்சேரி போலீசாருக்காக தமிழக அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞர்களான சண்முகசுந்தரம், ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள். விஜயாவுக்காக அரசு தரப்பில் தமிழக அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விஜயா தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆகியோர் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கற்றுத் தேர்ந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு நீதிக் கிடைக்க போதிய அக்கறை செலுத்தவில்லை.

இவ்வழக்கை 19.9.2008 அன்று முற்பகல் விசாரணை செய்து முடித்த நீதிபதி சொக்கலிங்கம், நீதிபதி வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை அன்று மாலையே வழங்கியது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஆறு புதுச்சேரி போலீசாரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நாடெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது.

திண்டிவனம் சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி, சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர், தேசிய மனித உரிமை ஆணையம் என அனைவரும் விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட்தை உறுதி செய்துள்ள போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

இன்று இந்தியா முழுவதும், குறிப்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 26 நீதிபதிகள், மேற்குவங்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் என பல நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், நீதித்துறையின் கண்ணியத்தை குறைத்து வருகிற வேளையில், அடித்தட்டிலுள்ள பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த அத்தியூர் விஜயாவிற்கு நீதிக் கிடைக்காதது மக்களிடையே மேலும் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்.

எனவே, இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட விஜயா சார்பிலும் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் அனுபவம் நிறைந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து மேல் முறையீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அப்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் உடன் இருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*