தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது விதிகளுக்கு மாறாக பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராகேஷ் சந்திராவிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுப்பணித்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை கடந்த பிப்ரவரி 28-ந் தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் தலைமைப் பொறியாளர் இடமாற்றம் செய்துள்ளார். இந்த இடமாற்ற உத்தரவை மார்ச் 2-ந் தேதியன்று பெற்றுக் கொள்ளுமாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி உள்ளார்.
மேலும், இடமாற்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து மார்ச் 1-ந் தேதியன்றே விடுவிக்கப்பட்டதாக எழுதிக் கையெழுத்துப் போடுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காமல் இளநிலைப் பொறியாளர்கள் இடமாற்ற உத்தரவை வாங்காமல் இருந்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது இதுபோன்ற இடமாற்றம் செய்வது சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பானது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.
எனவே, தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும், சட்ட விதிகளுக்கு மாறான இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்து அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply