சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில், புதுச்சேரிக்கு வருகை தந்த பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திடம் (NCEBC), 23-08-2008 அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமையில் கோ.சுகுமாரன் (அமைப்பாளர்), மு.முத்துக்கண்ணு, இர.அபிமன்னன், அ.மஞ்சினி, அ.ஜோதிப்பிரகாசம் ஆகியோர் அளித்த மனு:
புதுதில்லியிலுள்ள பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் 22, 23-08-2008 ஆகிய இரு நாட்களில் புதுச்சேரியில் முகாமிட்டு, பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அரசு மற்றும் பொது மக்களின் கருத்துக்களை அறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
இந்நிலையில் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எங்களின் கருத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடே போதுமானதாக இல்லை என்றும், மக்கள் தொகை அடிப்படையில் இன்னும் கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பல காலமாக கோரி வருகின்றன.
மேலும், புதுச்சேரி, மத்திய அரசின் நேரடியான ஆட்சியின்கீழ் வருவதால் மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க தனியே பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அவசியமற்றது.
இந்திய அரசியல் சட்டம் பிரிவுகள் 15(4), 16(4) கல்வியிலும், சமூக நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முயற்சி செய்வது அரசியல் சட்டத்திற்கு முரணானது. சமூக நிதிக் கோட்பாட்டிற்கு எதிரானது.
“ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களின் தேவைகளை நலத்திட்ட உதவிகள் மூலம் பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை” என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை எனக் கேட்டுக் கொள்கிறோம்.
Leave a Reply