மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்தியவர்களையும், அதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்விமணி உட்பட தலைவர்களையும் கைது செய்துள்ள தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் கடலூரில் இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்திய அவ்வமைப்பின் தலைவர் பாலகுரு, பேராசிரியர் பிரபா.கல்விமணி, நகைமுகன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இக்கூட்டம் நடந்து முடிந்தவுடன் போலீசார் அரங்கத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கூட்ட விளம்பர தட்டிகளையும், பதாகைகளையும் கிழித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அனுமதி பெற்று நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தோரை அச்சுறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை ஒடுக்கும் வகையில் போலீசார் நடந்துள்ளனர்.
போலீசாரின் அடக்குமுறையும், தமிழக அரசின் தமிழர் விரோத போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையேல், அனைத்து கட்சி, அமைப்புகளையும் ஒன்றுகூட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply