புதுச்சேரியில் நடந்த நிதிமோசடி குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க தீர்மானம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.01.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில், வணிக அவையில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினர். இதில் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனம் மூலம், முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக தருகிறோம் என்ற பெயரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ள சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். மேலும், இந்த நிதி மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

2. மேற்சொன்ன நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 600 பேர் என்பதாலும், ரூபாய் 13 கோடிக்கு மேல் மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாலும் இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, உரிய நடவடிக்கை எடுத்திட சி.ஐ.டி. போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

3. நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மக்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, அதனை விற்று அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

4. இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என தீர்மானித்துள்ளோம்.

5. நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கவும், இவ்வழக்கில் நீதிக் கிடைத்திட தொடர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் போராட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பகுதி வாரியாக பிரதிநிதிகள் பங்கேற்பர். இதன் ஒருங்கிணப்பாளராக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இருப்பார் எனவும் முடிவு செய்துள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*