புதுச்சேரி அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-07-2008 அன்று வெளியிட்ட அறிக்கை:


தனியார் பங்கேற்புடன் விளையாட்டுத் திடல் அமைக்க முடிவு செய்திருப்பதன் மூலம் பாரம்பரியம் மிக்க அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரியின் மையப் பகுதியில் உள்ள அண்ணா திடலில் விளையாட்டுத் திடல் அமைக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அந்த தொண்டு நிறுவனத்தோடு விரைவில் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

நகரத்திற்கு அருகேயே பல நவீன வசதிகள் கொண்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் ஒன்று இருக்கும் போது, பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்புடைய அண்ணா திடலில் இன்னொரு விளையாட்டுத் திடல் தேவையா?

வ.உ.சி., வீரமாமுனிவர், திரு.வி.க. அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் வேறு நிகழ்ச்சிகள் இல்லாத போது அண்ணா திடலில் விளயாடலாம் என கடந்த 02.09.2006 அன்று புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மாணவர்கள் அத்திடலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து விளையாட்டுத் திடல் அமைத்தால் பிற்காலத்தில் இத்திடலைப் பயன்படுத்தும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க நேரிடும். இதனால், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.

நகராட்சியில் ஒரு திட்ட்த்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் முதலில் அத்திட்ட வரைவை நகரமன்ற கூட்டத்தில் வைத்து உறுப்பினர்களின் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும். அதைவிடுத்து, முடிவு செய்து அறிவித்துவிட்டு, நகரமன்ற ஒப்புதலுக்கு வைப்பதாக கூறுவது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.   

புதுச்சேரி நகராட்சி சட்டம் மற்றும் விதிகளின்படி அரசு அதிகாரிகள் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் மத்திய அரசு உள்துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. இது குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விதிமுறைகளுக்கு எதிராக, மாணவர்களின் நலன் பாதிக்கும் வகையில் தேவையில்லாமல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*