தலைவர்களுடன் பேச்சுவார்த்தை… |
புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர். இறுதியில், புதுச்சேரி பல்கலைகழகப் பதிவாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை 12.11.2010 மதியம் முடித்துக் கொண்டனர்.
புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், தமிழ் பாடம் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்ப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி தாகூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தைப் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் ஆதரித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தினர்.
பின்னர், இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் பாபு ராவ் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கட்சி, அமைப்புத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் பாவாணன், செயலாளர் ப.அமுதவன், மீனவர் விடுதலை வேங்கைகள் மாநில அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா, தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், செயலாளர் பொறியாளர் தேவதாஸ், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், முற்போக்கு மாணவர் கழகத் தலைவர் கெளதம பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் கடந்த காலத்தில் இருந்தது போலவே தமிழ் ஒரு பாடமாக முதலாண்டு, இரண்டாமாண்டு பொருளதாரப் பிரிவில் தொடரும் என உறுதியளித்தார். அதனை எழுத்து மூலம் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொண்டனர்.
இப்போராட்டத்தை புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன் ஒழுங்கமைத்தும், இரவுப் பகல் பாராமல் மாணவர்களோடு இருந்தும் வெற்றிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply