மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தல்!

மணல் திட்டு…
அழகிய கடற்கரை..மணல் திட்டு…
கடற்கரையில் மீனவர்களின் படகுகள்…
1970-ஆம் ஆண்டின் சர்வே வரைபடத்தில் மணல் திட்டு…
சுனாமிக்கு 5 நாட்களுக்குப் பின்னுள்ள செயற்கைக்கோள் வரைபடம்..
செயற்கைக்கோள் வரைபடத்தில் மணல் திட்டு…

——————————————————————————————————————————————-
நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் இன்று (10.11.2010) மதியம் 1.00 மணியளவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு இக்பால் சிங் அவர்களை புரபீர் பேனர்ஜி, (பாண்டிகேன்), சி.எச்.பாலமோகனன், (புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு), கோ.சுகுமாரன், (செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), மோகனசுந்தரம்,(இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை), எஸ்.இராமச்சந்திரன் (புதுச்சேரி அறிவியல் கழகம்), சு.சத்தியமூர்த்தி, (கவுன்சிலர், மதிகிருஷ்ணாபுரம்)ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்:

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையினர் பாகூர் கொம்யூன், மூர்த்திக்குப்பத்தில் உள்ள முள்ளோடை வாய்க்காலில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை கட்டி வருகின்றனர். சுனாமி நிதியில் இருந்து இந்த துறைமுகம் கட்டப்படுகிறது. இந்த மீன்பிடி துறைமுகம் முள்ளோடை வாய்க்காலையும் கடலையும் இணைத்து, அதன் வழியே படகுகள் வந்து போகும்படி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நீண்ட காலமாக அங்கு கடலையும், வாய்க்காலையும் பிரிக்கும் மணல் திட்டு ஒன்றை இடித்திட பொதுப்பணித் துறையினர் முடிவு செய்து, தற்போது பாதி மணல் திட்டை அப்புறப்படுத்தி உள்ளனர்.

இந்த மணல் திட்டை அப்புறபடுத்துவது மிகப் பெரிய அழிவைத் தரும். இதனால், முள்ளோடை வாய்க்காலோடு இணைந்துள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்பு நீராகும் ஆபத்துள்ளது. இதனால், புதுச்சேரி – தமிழகப் பகுதி மக்களின் வாழ்வதராங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். குறிப்பாக அங்குள்ள நீராதாரத்தை நம்பியிருக்கும் 400 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் விவசாயம், 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, சோழர் காலம் தொட்டு இருந்து வரும் ஏரி, குளங்கள் அழிந்துப் போகும் நிலை ஏற்படும். சுனாமியின் போது இந்த வாய்க்கலுக்கு 3 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, இந்த மணல் திட்டு இருந்த காரணத்தால் இப்பகுதியில் எந்த பதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இத்துறைமுகத்தினால், கடலூர் பெண்ணையாற்றின் முகத்துவாரம் அடைந்து போய் வெள்ளம் உண்டாகும் அபாயம் உள்ளது.

பொதுப்பணித் துறையினர் அங்கு மணல் திட்டே இல்லை எனவும், மீனவர்கள் தங்கள் படகுகளை முள்ளோடை வாய்க்கால் கரையில் நிறுத்தி வைத்து மீன்பிடித்தனர் என்றும், கடந்த 2004-ல் சுனாமியின் போது மணல் திட்டு உருவானது எனவும் பொய்யான தகவல்களை கூறி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிப் பெற்றுள்ளனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வந்ததை உறுதியாக கூறுகின்றனர். மீனவர்கள் அங்கு படகுகளை நிறுத்தி வைத்ததாக பொதுப்பணித் துறையினர் கூறுவது பொய் என்றும் கூறுகின்றனர். அதோடு இது தொடர்பான பல வரைபடங்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வருவதை உறுதி செய்கிறது. மணல் திட்டு இல்லை எனக் கூறி, சட்ட விதிப்படி நடத்த வேண்டிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு குறித்த பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தைக்கூட பொதுப்பணித் துறையினர் நடத்தவில்லை.

ஏற்கனவே, கடலை மறித்து தேங்காய்த்திட்டு துறைமுகம் கொண்டு வந்ததால், அதற்கு வடக்கே உள்ள கடலோர கிராமங்கள் கடல் அரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடல் அரிப்பை சீர் செய்யவே அரசிடம் உருப்படியான திட்டமும், போதிய நிதியும் இல்லை. தற்போது அதே போன்றதொரு துறைமுகத்தைக் கொண்டு வருவது மேலும் கடலோர கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த துறைமுக திட்டத்திற்காக போதிய ஆய்வினை அரசு செய்யாததோடு, சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளிக்கும் போதே எந்தவித மணல் திட்டையும் சேதப்படுத்த கூடாது, நல்ல நீர் உப்பு நீராகும் வகையில் எதையும் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளது. மேலும், கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டுவதோ, கடலில் சுவர் கட்டுவதோ கூடாது எனவும் மத்திய சுற்றுச் சூழல் துறை பல முறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் கடல் அரிப்பு பற்றியும், கடற்கரையை பாதுகாப்பது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்துக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம். கடலில் இயந்திரம் மூலம் மணலை அள்ளுவது குறித்து கடல்சார் கண்காணிப்பு எதுவும்கூட மேற்கொள்ளப்படுவது இல்லை.

இந்நிலையில், கடந்த 08.11.2010 அன்று, கிராம விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கூட்டாக தலைமைச் செயலர் சந்திரமோகன், சுற்றுச் சூழல் துறை சிறப்புச் செயலர் தேவநீதிதாஸ் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டோம். அப்போது தேவநீதிதாஸ் அவர்கள் இத்திட்டத்தை மறுஆய்வு செய்யும் வரையில் வேலையை நிறுத்தி வைக்குமாறு அருகிலிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் கூறினார். ஆனால், தற்போது முள்ளோடை வாய்க்காலில் தொடர்ந்து இயந்திரம் மூலம் மணல் அள்ளும் வேலை நடந்து வருகிறது. இதனால், மேற்சொன்ன மணல் திட்டு முற்றிலும் அழியும் ஆபத்துள்ளது.

ஏற்கனவே கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொதுப்பணித்துறையினர், தற்போது மீண்டும் ஒரு துறைமுக திட்டத்தைக் கொண்டு வந்து மேலும் அழிவைத் தருவது நல்லதல்ல. பொதுப்பணித்துறையினர் நீர் நிலைகளைப் பாதுகாக்க நிறைய நிதி ஒதுக்கீடு செய்து, ஏரி பாதுகாப்புச் சங்கங்களை உருவாக்கி ஏரி, குளங்களை புனரமைந்துள்ளனர். தற்போது அவற்றை கெடுக்கும் வகையில் செயல்படுவது தவறானது.

இத்திட்டத்தினால் தமிழகப் பகுதியும் பாதிக்கப்படுவதால் கடலூர் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.

எனவே, தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, பெரும் அழிவைத் தரும் இந்த துறைமுகத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், சுனாமி நிதியில் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டும் எனக் கோருகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி அரசிடம் அறிக்கை அளிக்குமாறுகோருவதாக கூறினார். மேலும் அரசு அதிகாரிகளிடம் பேசி உடனடியாக துறைமுகப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.

மனுவில் கையெழுத்திட்டுள்ள நல்லாட்சிக்கான கூட்டமைப்பிலுள்ள அமைப்பினர்:

1. இன்டேக், 2. பீப்பில்ஸ் பல்ஸ், 3. புதுச்சேரி அறிவியல் கழகம், 4. புடண்கோ, 5. பூவுலகின் நண்பர்கள், 6. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, 7. பாண்டிகேன், 8. செம்படுகை நனீரகம், 9. புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*