புதுச்சேரி, வில்லியனூரில் பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உதவிட சென்ற போது, போலீஸ் அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகள் கூறி மிரட்டித் தாக்க வந்த சம்பவம் குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
அவர் கொடுத்துள்ள புகார் மனு:
’31-01-2008 அன்று காலை சுமார் 11.30 மணியளவில், வில்லியனூர் உளவாய்க்கால் ஊரைச் சேர்ந்த என்னுடைய நண்பர் சந்திரசேகர் தொலைபெசியில் என்னிடம் “வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தி தாக்கியதால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருப்பதாக” கூறினார். மேலும் அவர், போலீசார் தாக்கியதால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ள மக்களுக்கு உதவி செய்திட உடனடியாக என்னை மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.
நான் உடனடியாக என்னுடைய நெருங்கிய நண்பர்களான லோகு.அய்யப்பன், சாமிஆரோக்கியசாமி மற்றும் சிலரோடு மேற்சொன்ன மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இருந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு முன்னாள் இருந்த இருக்கையில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் அமர்ந்துக் கொண்டிருந்தார்.
அப்போது நான் அங்கிருந்த மேற்சொன்ன சந்திரசேகரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் காயம்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் கடுமையான முறையில் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் தலையிட்டு, “காயம்பட்டு மயக்க நிலையில் பொதுமக்கள் உள்ளனர், நீங்கள் உங்கள் விசாரணையை சிகிச்சை முடிந்த பின்னர் மேற்கொள்ளுங்கள்” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். உடனடியாக அவர் கோபத்துடன் என்னை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறி திட்டி, மிரட்டினார். வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்தினார். மேலும், அவர் என்னை நோக்கித் தாக்க வந்தார். அப்போது, அவருடன் இருந்த போலீசார் என்னை அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர். என்னுடன் வந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காமல் என்னிடம் கடுமையாக நடந்துக் கொண்டார். இத்தனைக்கும் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
கடந்த 1989 முதல் மனித உரிமைக்ககாகப் பாடுபட்டுவரும் என்னிடம் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் இவ்வாறு நடந்துக் கொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. நான் உடனடியாக மதியம் சுமார் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து, பெரியக்கடை காவல்நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தந்தி மூலம் நடந்தவற்றை தெரிவித்தேன்.
மேற்சொன்ன வில்லியனூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நேர்ந்ததால் உடனடியாக நான் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க முடியவில்லை. எனவே, நான் தற்போது தங்களிடம் இப்புகார் மனுவை அளிக்கின்றேன். தாங்கள் இப்புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்து, சட்டத்திற்குப் புறம்பாக என்னை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி, அச்சுறுத்தி, தாக்க வந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.’
இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போலீசார் உடனடியாக மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளரிடம் புகாரைப் பெற்றுக் கொண்டு, கோ.சுகுமாரன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 353 (அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்), 506(1) (அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர்.
Leave a Reply