மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 21.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
அமைச்சர் ஷாஜகான் பதவி விலக கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் புதுச்சேரி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமைச்சர் ஷாஜகான் மீது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை நடத்த தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய கோரி நேற்றைய தினம் புதுச்சேரி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்தன. இந்த சுவரொட்டிகள் “மனித உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் பாரதீய ஜனதா கட்சி, காலாப்பட்டு தொகுதி” ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த சுவரொட்டிகள் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்டதாக மக்கள் எண்ணும்படி திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ளன. கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
அமைச்சர் ஷாஜகான் வழக்கு குறித்து அனைத்து ஆவணங்களையும் சேகரித்து எங்களது சட்ட வல்லுநர்களிடம் உரிய சட்ட ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதன் பின்னரே, இப்பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்ய உள்ளோம்.
மக்களைப் பிரித்து மலிவான அரசியல் செய்யும் மதவாத அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றோடு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருபோதும் இணைந்து செயல்படாது. இந்நிலையில், கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல பெயரையும், ஆதரவையும் சீர்குலைக்கும் வகையில் மதவாத கட்சியின் பெயரோடு சேர்ந்து இருப்பதுபோல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
அண்மைக் காலமாக மனித உரிமை என்ற பெயரில் போலியான அமைப்புகள் கட்டப் பஞ்சாயத்து செய்வது, சட்டத்திற்குப் புறம்பாகவும் செயல்படுவது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி வருகிறோம். இது பற்றி விரைவில் புதுச்சேரி அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.
Leave a Reply