போராட்டம் நடத்திய இடதுசாரிகள் மீது போலீஸ் தாக்குதல்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 09.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய இடதுசாரி கட்சியினர் மீது தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

அகில இந்திய அளவில் நடந்த போராட்டத்தின் அங்கமாக நேற்றைய தினம் புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஒன்றாக சேர்ந்து விலைவாசி உயர்வை எதிர்த்து சட்டமன்ற மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 32 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

புதுச்சேரி போலீசாரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்குக் காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகிறோம்.

முன்கூட்டியே அறிவிப்பு செய்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்ட போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத போலீசாரின் அலட்சியப் போக்குதான் அனைத்து சம்பவங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு போலீசாரின் அத்துமீறல் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*