
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2025) விடுத்துள்ள அறிக்கை:
சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? என்பது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த 14.08.2024 அன்று புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் ‘சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்துவோம்’ என அறிவித்தார். ஆனால், இதுவரையில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி செய்யவில்லை.
ஆனால், தற்போது முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் ‘துணைநிலை ஆளுநர் வரும் 15ஆம் நாளன்று குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக்குழுவில் சேர்ப்பது குறித்துப் பேசுவார். மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இது கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றதாகும்.
சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இதுவரையில் 15 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேறவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சார்பில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply