மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2025) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி தொழிநுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கைச் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த 11.01.2025 அன்று, மாலை 5 மணியளவில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதுடன், அவரைப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளது. உடனே அம்மாணவி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததோடு, 4 பேர் தாக்கியதாக எம்.எல்.சியாக பதிவு செய்து, காவல்துறைக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அம்மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பல்கலைக்கழகப் பதிவாளர் பாலியல் துன்புறுத்தலை மறைத்து அளித்த புகார் மீது காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்து மருத்துவமனையில் இருந்து முறைப்படி தகவல் கிடைத்தும் 3 நாட்கள் கழித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதுவும் பாலியல் துன்புறுத்தல் தவிர்த்து ஆபாசமாக பேசுதல் 296(பி), அத்துமீறி நுழைதல் 329(3) உடன் 3(5) பி.என்.எஸ். ஆகிய பிணையில் வெளிவரக் கூடிய சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இப்பிரிவுகளுக்குத் தண்டனை 3 மாதங்கள் அல்லது அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.
பல்கலைக்கழகப் பதிவாளர் பாலியல் துன்புறுத்தலை மறைத்து உண்மைக்கு மாறாக புகார் அளித்தது குற்றத்தை மூடிமறைக்கும் செயல் என்பதோடு, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். காலாப்பட்டு போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்யாமல், பல்கலைக்கழகப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தது தவறானது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் இவ்வழக்கில் தொடக்கம் முதலே முறையாக செயல்படவில்லை. காவல்துறை உயரதிகாரியும் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். இவ்வழக்கைப் புதுச்சேரி காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்காது.
எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply