சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து படுகொலை: விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.03.2024) விடுத்துள்ள அறிக்கை:

ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள், என்கவுன்டர் செய்யுங்கள், எங்களிடம் ஒப்படையுங்கள் போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால், இது நிலவுகிற சட்டப்படி செய்ய முடியாதவை.

சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து முறையிட்டதால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

இக்கொடூரச் சம்பவத்திற்குக் கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதில் அரசு படுதொல்வி அடைந்துள்ளது. பள்ளிகளில் தாராளமாகப் போதைப் பொருள் புழங்குகிறது. இதைத் தடுக்கக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருட்களைத் தடுக்கக் காவல்துறை, கல்வித்துறை போன்ற தொடர்புடைய துறைகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போதைப் பொருட்கள் தமிழகம் வழியாக புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கத் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வைத் தடுக்க முடியாது.

போதைப் பொருள் தடுக்க உருவாக்கப்பட்ட காவல்துறைத் தனிப் பிரிவுக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கும் முடிவு சரியானது. இப்பிரிவின் செயல்பாடுகளை நேரடியாக டி.ஜி.பி., மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கிக் கண்காணிக்க வேண்டும்.

இக்கொடிய குற்றத்திற்குப் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தாதது, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காணாமல் போன சிறுமியை நான்கு நாட்களாக கண்டுபிடிக்காதது என அரசின் அலட்சியமே முக்கிய காரணமாகும். இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க (Vicariously liable) வேண்டும்.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் துணைநிற்பதோடு, கடமையாக கருதிச் செயல்படும்.எனவே, புதுச்சேரி அரசு இவ்வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவித்தபடி நிவாரணம் முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*