மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் செல்போன் அழைப்பு விவரங்களைப் பெற முயற்சி: 7 நாட்களில் விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தல்!

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா ஆகியோர் இன்று (02.08.2024) பொறுப்பு டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவிப்பு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்ற 30.07.2024 அன்று தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மேற்சொன்ன ஜான்சி (எ) ஜனாஸ் ராபி காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் செல்போன் அழைப்பு விவரங்களைக் (Call Details Record) கேட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இது சட்டவிரோதமான செயல் என்பதோடு தண்டனைக்குரிய குற்றமாகும்.

என்வே, செல்போன் அழைப்பு விவரங்களைத் தர கூடாது எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், மேற்சொன்ன ஜான்சி (எ) ஜனாஸ் ராபி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி.யும், பொறுப்பு டி.ஜி.பி.யுமான அஜீத்குமார் சிங்லா 7 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய போலீஸ் ஆப் போலீஸ்சிங் (Police of Policing) பிரிவு அதிகாரிக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*