மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2024) விடுத்துள்ள அறிக்கை:
அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த 2022ஆம் ஆண்டு துறைமுகத் துறையில் இளநிலைப் பொறியாளர், காவல்துறையில் உதவி ஆய்வாளர், போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளர், பொருளாதார மற்றும் புள்ளியல் துறையில் புள்ளியல் அதிகாரி, தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் தொழில்நுட்ப அதிகாரி, போக்குவரத்துத் துறையில் உதவி வாகன ஆய்வாளர், வேளாண் துறையில் வேளாண் அதிகாரி, வேளாண் நீரியல் அதிகாரி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் திட்ட அதிகாரி ஆகிய 9 அரசுத் துறைகளில் மொத்தம் 180 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 18%, மிக மிக பிற்படுத்தப்பட்டோர் (EBC) 2%, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) 2%, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) 0.5% ஆகிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராடியதன் விளைவாக 2023-இல் அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களில் மேற்கண்டவாறு இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், 9 துறைகளுக்கான 180 சான்றிதழ் பதிவுப் பெறாத பணிடங்களை நிரப்புவதில் மேற்சொன்ன சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் ஜெயசங்கர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இது சட்ட விரோதம் என்பதோடு சமூக நீதிக்கு எதிரானது. இது இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாத பணியிடங்களைத் தற்போது நிரப்பும் போது இடஒதுக்கீடு அளிக்காதது ஏற்புடையதல்ல. இச்செயல் பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் காத்துக் கிடக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கும் அநீதியாகும்.
70 சதவீத மக்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் ஒரு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரியின் செயலுக்குப் புதுச்சேரி அரசு துணைப் போவது கண்டிக்கத்தக்கது. இது வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம்.
Leave a Reply