அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (16.07.2024) செவ்வாய், காலை 10.00 மணியளவில், புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம் – தோழமைக் கூடல் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வெ.அன்பரசன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செலவன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஜெ.சம்சூதீன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.சா.தீனா, தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் இரா.வேலுச்சாமி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அர.அபிமன்னன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், சுற்றுச் சூழல் மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது பற்றி ஆதாரங்களுடன் அளித்த புகாரில் பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்புக் காவல்துறையில் (Vigilance and Anti-Corruption Police Unit) விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வருகிறார். கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவு காவல்துறையினரும் விசாரணையை முடித்து வழக்குப் பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். இதுகுறித்து தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான தலைமைச் செயலருக்கு (Chief Vigilance Officer) புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
கடந்த 02.03.2024 அன்று 9 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரைப் போலீசார் கைது செய்தனர். கடந்த 03.05.2024 அன்று இவ்வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை முடித்து 572 பக்கங்கள் கொண்ட குற்ற அறிக்கையை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்புணர்வு, போக்சோ, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் சட்டத்துறை அமைச்சர் திரு. க.இலட்சுமிநாராயணன் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞர் (Special Public Prosecutor) நியமிக்க முடிவெடுத்து அதற்கான கோப்பினைச் சட்டத்துறைக்கு அனுப்பியுள்ளார். ஆனால், சட்டத்துறைச் சார்புச் செயலர் (Under Secretary) ஜான்சி (எ) ஜனாஸ் ராபி இக்கோப்பிற்கு ஒப்புதல் வழங்காமல் குறிப்பு எழுதித் திருப்பி அனுப்பியுள்ளார்.
அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 4(5)-இன்படி வன்கொடுமை வழக்குகள் நடத்த பாதிக்கப்பட்டோர் தேர்வுப்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. இதுகுறித்து சட்டத்துறையிடம் கருத்துக் கேட்கும்போது மறுத்து வருகிறார். இது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(g)-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும், எந்தவித தகுதியும் இல்லாமல் சட்ட விதிகளுக்கு மாறாக இவர் சட்டத்துறைச் சார்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.
சட்டத்துறை என்பது அனைத்துத் துறைகளும் சட்டப்படி செயல்பட வழிகாட்ட கூடிய மிக மிக முக்கியமான துறையாகும் (Sensitive Department). இத்துறையில் முக்கிய பொறுப்பில் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் அதிகாரி இருப்பது புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும்.
எனவே, சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் வரும் 25.07.2024, வியாழனன்று, காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
Leave a Reply