மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.07.2024) விடுத்துள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த 8 பேர் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்லர், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் காரணம் அவர் 2500 கோடி ரூபாய் ஆரூத்ரா நிதி நிறுவன மோசடிக்கு எதிராகப் போராடி, மக்களுக்கு நிதியைப் பெற்றுத் தந்தார் என்பதுதான் என்ற செய்தியும் அடிபடுகிறது. அதேபோல், கொலைக்கு வேறு காரணம் இருக்கிறதா என்பதும் கண்டறியப்பட வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசும், காவல்துறையும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply