சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மறுப்பு: சட்டத்துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.07.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க அரசின் முடிவுக்குச் சட்டத்துறை அதிகாரி மறுத்ததால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 02.03.2024 அன்று 9 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரைப் போலீசார் கைது செய்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் அரசுக்கும், காவல்துறைக்கும் மிகப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

கடந்த 03.05.2024 அன்று இவ்வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை முடித்து 572 பக்கங்கள் கொண்ட குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்புணர்வு, போக்சோ, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் சட்டத்துறை அமைச்சர் அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க முடிவெடுத்து அதற்கான கோப்பினைச் சட்டத்துறைக்கு அனுப்பியுள்ளார். ஆனால், சட்டத்துறைச் சார்புச் செயலர் (Under Secretary) ஜான்சி (எ) ஜனாஸ் ராபி இக்கோப்பிற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் பார்வதி ஷா பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு, சங்கரராமன் கொலை வழக்கு, காதி போர்டு கணேசன் கொலை வழக்கு எனப் பல வழக்குகளில் சட்டத்துறை அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்துள்ளது.

தற்போதைய போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியாயமாகவும், திறம்படவும் வழக்குகளை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும், ஒரு சட்டத்துறை அதிகாரி சட்ட அமைச்சர் முடிவுக்கு எதிராக செயல்படுவது என்பது சட்ட, விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதியின்படி வன்கொடுமை வழக்குகள் நடத்த பாதிக்கப்பட்டோர் தேர்வுப்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கவும் மறுத்து வருகிறார். இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது பற்றி அளித்த புகாரில் பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி ஊழல் மற்றும் கண்காணிப்புக் காவல்துறையில் விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.

மேலும், எந்தவித தகுதியும் இல்லாமல் சட்ட விதிகளுக்கு மாறாக இவர் சட்டத்துறைச் சார்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை சார்புச் செயலர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விரைவில் அனைத்துக் கட்சி, இயக்கங்கள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*