கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.06.2024) விடுத்துள்ள அறிக்கை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் இறப்பு, 107 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும், காவல் கண்காணிப்பாளர் உட்பட பல காவல்துறை அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீதும், தடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற ஆண்டு மதுராந்தகம், மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 14 பேர் உயிழந்தனர். அப்போழுதே தமிழக அரசு கள்ளச்சாராயத்தைத்ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது.

கள்ளச்சாராய சாவுக்குத் தமிழக அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

கள்ளச்சாராயம் முழுவதையும் தடுப்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டறிந்து தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே, இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*