மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதீமன்றத்தின் பெயரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றிய பிறகும்கூட உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றப்படவில்லை. அப்போது உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டீஷ் ஆட்சியில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய நகரங்களில் மூன்று உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்களின் பெயர்கள் அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. ஆனால், இந்த மூன்று நகரங்களின் பெயர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை என மாற்றப்பட்ட பின்னரும் கூட உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படாமலேயே இருந்தன. தற்போது மத்திய அரசு இந்த மூன்று உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நியாயமானது. இந்தச் சூழலில், ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்ற சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைவிட்ட சுந்தரலிங்கனார் தியாகத்தை நினைவில் கொள்வது பொறுத்தமானது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால் தனித்த கலாச்சாரம் மற்றும் அடையாளம் கொண்ட பகுதியாக புதுச்சேரி இன்றும் திகழ்கிறது.
1966-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று பஞ்சாபில் இருந்து தனியாக பிரித்து அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் பெயர் பஞ்சாப் மற்றும் அரியான உயர்நீதிமன்றம் என மாற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றி சட்டம் இயற்றும் போது புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல், பிரதமர் டக்டர் மன்மோகன்சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, தமிழக முதலமைச்சர் திரு. மு.கருணாநிதி ஆகியோருக்கு விரிவான மனு அனுப்பியுள்ளோம். இந்த கோரிக்கையை ஆதரிக்க வேண்டி புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சி, அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
Leave a Reply