மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.11.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி திருக்கனூர் காவல்நிலையத்தில் பொய் வழக்கில் பழங்குடி இருளர் இளைஞர் அடித்து சித்தரவதைச் செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பழங்குடி இருளர்கள் மீதான போலீஸ் அத்துமீறல்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த 30.04.2023 அன்று பழங்குடி இருளர் சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்த தாஸ், முருகன், சுரேஷ், பன்னீர், சந்துரு ஆகியோர் மீது திருக்கனூர் காவல்நிலையப் போலீசார் போக்சோ வழக்குப் போட்டுள்ளனர். தற்போது இவ்வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தூண்டுதலின் பேரில் கடந்த 04.06.2023 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்த சிறுமியின் அண்ணன் ஶ்ரீகாந்த் (வயது 18) என்ற பழங்குடி இருளர் இளைஞர் மீது சிறுமி ஒருவர் தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தி மிரட்டியதாகப் பொய்ப் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் மேற்சொன்ன பழங்குடி இளைஞர் மீது பொக்சோ வழக்குப் போட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் போக்சோ வழக்கில் சமரசம் செய்துகொள்ளவே இப்பொய்ப் புகார் அளித்து பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
அதன் பின்னரும், போக்சோ வழக்கில் சமரசம் செய்து கொள்ளாததால் மீண்டும் கடந்த 28.10.2023 அன்று மேற்சொன்ன ஶ்ரீகாந்த், அவரது உறவினர் தினேஷ் ஆகியோர் மீது ஶ்ரீகாந்த் மீதான போக்சோ வழக்கில் சாட்சியை மிரட்டியதாகப் பொய்ப் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் திருக்கனூர் போலீசார் ஶ்ரீகாந்த், தினேஷ் ஆகியோர் மீது வழக்குப் போட்டுள்ளனர். உடனே தினேஷை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கில் கடந்த 22.11.2023 அன்று திருக்கனூர் போலீசார் மேற்சொன்ன ஶ்ரீகாந்தை கைது செய்துள்ளனர். அப்போது திருக்கனூர் காவல்நிலையத்தில் ஶ்ரீகாந்தை சங்கிலியால் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். இதனை ஶ்ரீகாந்தின் தாய், உறவினர் ஒருவர் பார்த்துள்ளனர்.
போக்சோ வழக்கில் சமரசம் ஆகாததால் பழிவாங்கும் நோக்கில் பழங்குடி இருளர் இருவர் மீது திருக்கனூர் காவல்நிலையத்தில் இரண்டு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
கடந்த 25.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பழங்குடி இருளர்கள் மீது காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 3 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்தரவதைச் செய்து பொய் வழக்குப் போட்டனர். இச்சம்பவத்திலும் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட போலீசார் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, புதுச்சேரி அரசு திருக்கனூர் காவல்நிலையப் போலீசார் பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, சங்கிலியால் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் உள்ளிட்ட பழங்குடி இருளர்கள் மீதான போலீஸ் அத்துமீறல்கள் குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்த திருக்கனூர் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், அனைத்துக் கட்சி, அமைப்புகள் சார்பில் டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
Leave a Reply