மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.11.2023) விடுத்துள்ள அறிக்கை:
ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் 14 ஆண்டுகள் தண்டனைக் கழித்தவர்களை முன்விடுதலை செய்யப்பட வேண்டும். இதுபோல், கடந்த காலங்களில் பல ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கென உள்துறை அமைச்சர் தலைமையில் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழு உள்ளது. இக்குழுவில் தலைமை நீதிபதி, தலைமைச் செயலர், சட்டச் செயலர், டி.ஜி.பி., சிறை ஐ.ஜி., தலைமைச் சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுப் பரிந்துரை அடிப்படையிலேயே ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30.10.2023 அன்று மேற்சொன்ன அறிவுரைக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பளிக்கப்படவில்லை. டி.ஜி.பி. ஒருதலைப்பட்சமாக சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைமை நீதிபதி தன்னை இக்குழுவில் இருந்து விடுவிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தலைமை நீதிபதி நீதித்துறையின் பிரதிநிதி ஆவார். அவரின் கருத்தைக் கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்தது என்பது தேவையில்லாமல் சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவற்றுக்கும் நீதித்துறைக்கும் மோதலை உருவாக்கும். மேலும் நீதித்துறையையே அவமதிக்கும் செயலாகும். இதனால், அரசியல் சட்டச் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும், இதுபோன்ற தவறான அணுகுமுறையால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது முன்விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்ட 11 பேரில் பலர் 14 ஆண்டுகள் தண்டனைக் கழிந்த பின்னரும் சிறையில் உள்ளவர்கள். அதில் 6 பேர் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள். மேலும், இந்த அறிவுரைக் குழு 6 மாதத்திற்கு ஒருமுறைக் கூட்டப்பட வேண்டுமென 2007-இல் இந்த அறிவுரைக் குழு அமைத்து உள்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு இக்குழுக் கூட்டம் கூட்டப்படுவதில்லை. இது தண்டனைச் சிறைவாசிகளின் உரிமைகளை முற்றிலும் மறுக்கும் செயலாகும். சிறைவாசிகள் முன்விடுதலைக் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புக்களையும் மீறுவதாகும்.
எனவே, ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். மேலும், 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கழித்த ஆயுள் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் தகுதியானவர்கள் அனைவரையும் உடனடியாக முன்விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply