
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.10.2023) விடுத்துள்ள அறிக்கை:
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டதை ரத்து செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசின் கல்வித்துறை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 26 பேர், பயிற்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 23 பேர் என மொத்தம் 49 அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னால், பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லையென மத்திய சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் அளிக்கவில்லை.
ஆசிரியர் பற்றாக்குறையால் மேல்நிலைப் பள்ளிகளில் ஓய்வுபெற்ற 77 விரிவுரையாளர்களைப் பணியில் நியமிக்க கல்வித்துறை முடிவு செய்தது. இம்முயற்சி கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கவே அதிகப்படியான சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வித்துறை அலுவலகப் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் கூடுதல் சம்பளம் பெற்றுக் கொண்டு, குறைந்த சம்பளம் உள்ள எல்.டி.சி., யு.டி.சி., பணி செய்வது சரியானதல்ல.
மேலும், ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலக இடமாற்றத்தால் மாணவர்களின் கல்விப் பெருமளவில் பாதிக்கும். அதுவும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கூடுதல் சுமை என்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால், ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
கல்வித்துறை அலுவலகப் பணிக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவது எ.டி.சி., யு.டி.சி., போன்ற பதவிகளுக்குக் காத்திருக்கும் பலரின் வேலைவாய்ப்பையும் பறிக்கும் செயலாகும். இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.
எனவே, புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் இதில் தலையிட்டு கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், கல்வித்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
Leave a Reply