மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.08.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரிக்கு வருகைத் தந்த குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்திய குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக ஆகஸ்ட் 7, 8 ஆகிய நாட்களில் புதுச்சேரிக்கு வருகைத் தந்தார். அவரைச் சந்திக்க சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என முக்கிய பிரமுகர்கள் முறைப்படி அனுமதி கோரி இருந்தனர். ஆனால், பலருக்குச் சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
குறிப்பாக புதுச்சேரிக்கு மாநிலத் தகுதிக் கேட்டு மனு அளிக்க ஓர்லயன்பேட்டை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி அவர்கள் பொதுநல அமைப்புப் பொறுப்பாளர்களுடன் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு மட்டுமே அனுமதி அளித்துவிட்டு, பொதுநல அமைப்பினருக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவர் குடியரசுத் தலைவரை சந்திக்காமல் திரும்பிவிட்டார்.
அதேபோல, துணை சபாநாயகர் திரு. பெ.இராஜவேலு, அவரது துணைவியார் திருமதி. மாலதி இராஜவேலு, இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வைத்தியநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முறைப்படி அனுமதி கேட்டும் அளிக்கப்படவில்லை.
குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டவர்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரையும் நள்ளிரவு 12 மணிக்குத் தூக்கத்தில் எழுப்பி தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவரை சந்திக்க புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுமதி அளித்துள்ளனர்.
இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் நடக்க மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததே காரணம். இதனால், குடியரசுத் தலைவருக்கு மிகப் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே, மேற்சொன்ன நிர்வாகக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்குக் குடியரசுத் தலைவர் செயலகம், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply