மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.06.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு நிதி ரூ. 5 இலட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கக் கோரி ஜூலை 4-இல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு எனத் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்குவதாகக் கூறி பல்கலைக்கூட பேராசிரியர்கள், ஊழியர்கள் சம்பளப் பணம் (Grant-in-aid) ரூபாய் 5 இலட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி எடுத்துச் செலவழித்துள்ளார். இவருக்கு ரூபாய் 9999/- மட்டுமே நிதியைக் கையாள வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார். இது விதிமீறல் மட்டுமல்ல கிரிமினல் குற்றமாகும். இதனால், இவருக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் பறிக்கப்பட்டது.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது தலைமைச் செயலர் தலைமையில் இயங்கும் ஊழல் கண்காணிப்புப் பிரிவு (Chief Vigilance Office) அதிகாரிகள், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இப்புகார் மீது கடந்த 18.05.2023 அன்று சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், இதுநாள்வரையில் தலைமைச் செயலர் தலைமையிலான ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளும், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், மேற்சொன்ன பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி., விதிகளை மீறி தகுதி இல்லாத 8 தற்காலிக உதவிப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி உள்ளார். இதில் அருணகிரி என்பவர் ஒரே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, பாரதியார் பல்கலைக்கூடம் என இரண்டு அரசு துறைகளில் பணியாற்றி சம்பளம் பெற்றுள்ளார். இது விதிமீறல் என்பதோடு கிரிமினல் குற்றமாகும். தூயவர்மன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் பணியில் நியமிக்கப்பட்ட போது பி.எச்.டி., பட்டம்கூட பெறவில்லை. இப்படிதான் தகுதி இல்லாதவர்கள் 8 பேர் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்சொன்ன 8 உதவிப் பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய கோரி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் எடுக்காமல் காலந்தாழ்த்தி வருகின்றனர்.
எனவே, பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கவும், 8 உதவிப் பேராசிரியர்களைப் பணி நீக்கவும் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, எதிர்வரும் 04.07.2023 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply