மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (29.05.2023), காலை 10 மணிக்கு, தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். தாய்மொழி வழிக் கல்விக் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் நா.இளங்கோ முன்னிலை வகித்தார்.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழ்த் தேசிய பேரியக்கம் தலைவர் இரா.வேல்சாமி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஜெ.சம்சுதீன், மாவட்டத் தலைவர் பலுலுல்லா, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா, இந்திய மக்கள் சக்தி இயக்கத் தலைவர் அரிகிருஷ்ணன், காந்தி மக்கள் இயக்கத்தின் நிறுவுநர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் மணிமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1) சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் 01.06.2023 வியாழன், காலை 10 மணிக்கு, கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழ் விருப்பப் பாடமாக இருக்குமென கூறப்பட்டுள்ளது. ஆனால், இணை இயக்குநர் கைப்பேசியில் இருந்து JD Academics என்ற வாட்ஸ்ஆப் குழுவில் குரல் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழை விருப்பப் பாடமாக குறிப்பிடாதீர்கள் என பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழே படிக்காமல் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலமான நிலை உள்ளது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
2) புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கொண்டு வர வேண்டும்.
3) அரசுப் பள்ளிகளில் எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படாமல் சிபிஎஸ்இ வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக அவசரகதிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டம் திணிக்கப்படுகிறது. மத்திய அரசு இணையதளத்தில் தவறான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து அரசுப் பள்ளிகளுக்குச் சிபிஎஸ்இ அனுமதி பெறப்படுகிறது. இதனால், பெருமளவில் பாதிக்கப்பட போவது அரசுப் பள்ளி மாணவர்கள்தான். மேலும், இந்தக் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு ஒப்புக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி போதுமானது அல்ல. இச்சூழலில், இந்தாண்டு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, இந்தாண்டு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை செயல்படுத்த கூடாது.
4) இதுகுறித்து முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளிப்பது.
Leave a Reply