மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.05.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து மிரட்டி தனியார் பேருந்து நடத்துநர்கள், ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபடுவது குறித்து அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும் ஏராளமான தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், தமிழக அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், கடலூர் வழியாக செல்லும் நீண்ட தூர தமிழக அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆனால், கடலூர் செல்லும் தனியார் பேருந்துகளின் நடத்துநர்கள் ரவுடிகளுடன் கடலூருக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து மிரட்டுகின்றனர். தனியார் பேருந்துகளில் மட்டுமே பயணிகள் ஏற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் பேருந்துகளை நிறுத்த கூடாது எனக் கூறி பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். இது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.
இதைத் தட்டிக் கேட்கும் பயணிகளை ஆபாசமாக பேசி, மிரட்டி, தாக்கவும் முயற்சிக்கின்றனர். இதுபோன்று அன்றாடம் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளால் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது. மேலும், சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து சட்டம் ஒழுங்குக் காவல்துறை, போக்குவரத்துக் காவல்துறை, போக்குவரத்துத் துறை, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்துக் கூட்டம் போட்டு உரிய தீர்வு காண வேண்டும். தமிழக அரசுப் பேருந்து நடத்துநர்கள், ஒட்டுநர்கள், பயணிகள், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இல்லையேல், தனியார் பேருந்துகள் மற்றும் தமிழக அரசுப் பேருந்துகளின் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் இடையே எந்நேரத்திலும் மோதல் வெடிக்கும் ஆபத்துள்ளது. இதனால், புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கு இடையே நிலவும் சுமூகமான உறவு பாதிக்கும்.
இதுகுறித்து புதுச்சேரி, தமிழக முதலமைச்சர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர்கள், சட்டம் ஒழுங்குக் காவல்துறை, போக்குவரத்துக் காவல்துறை, நகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.
Leave a Reply